டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், இது தற்போது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாக மாசு காற்று வீசி மக்களை அச்சுருத்தி வருகிறது. அங்கு சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பதே மிகவும் கடினமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு காற்றின் தரம் குறைந்துதான் வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணம் வானிலை மற்றும் பருவகால மாற்றங்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டும் மிக மோசமான நிலையில் காற்று மாசு ஏற்பட்டு உள்ளது. டில்லி மற்றும் என்.சி.ஆர். பகுதியில் வசிக்கும் மக்கள் விஷக் காற்றால் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக குளிர்காலத்தில் இந்த காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. ஆகையால், காற்றின் தரமானது தொடர்ந்து மோசமான பிரிவில் இருந்து வருவதால், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏராளமானவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.
டெல்லியில் மட்டும் இந்த அபாயம் ஏற்படவில்லை, உத்தரபிரதேசம் நகரங்களில் மாசு தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நகரத்தின் பல பகுதிகளில் நிறுவப்பட்ட சென்சார்களில் பெரும்பாலானவை சிவப்பு எச்சரிக்கையை காட்டியது. இதுதான் அதிகபட்ச மோசமான தரம். அதாவது 300க்கும் மேல் பதிவாகியிருக்கிறது. டெல்லியை ஒட்டியுள்ள நகரங்களில் 400க்கும் மேல் பதிவாகியிருக்கிறது. நொய்டாவின் செக்டார் 1ல் காற்று தரப்புள்ளி (AQI) 396 ஆகவும், காஜியாபாத்தில் காற்றின் தரக் குறியீடு 381 ஆக பதிவாகி உள்ளது.
குருகிராம், சோனிபட் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நவம்பர் 23 வரை மூடப்பட்டுள்ளன. மேலும் டெல்லியில் 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் புது டெல்லி ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக 13 ரயில்கள் தாமதமாக வந்தன. மேலும் பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் 90 விமானங்களின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.