இந்தியர்கள் சிலர், போலி ஐபிஎல் போட்டிகளை நடத்தி ரஷ்ய சூதாட்டக்காரர்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய சம்பவம் உங்களுக்குத் தெரியுமா?.
லைட்ஸ், கேமரா, ஆக் ஷன் - இதோ உங்களுக்காக வந்துவிட்டது முற்றிலும் புதுமையான இந்தியன் பிரிமியர் லீக். இந்த ஆட்டத்தில் வழக்கமான எந்த ஆடம்பரமும், நட்சத்திர வீரர்களும் மற்றும் CSK, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் போன்ற எந்த அணிகளும் இல்லாமல் ஒரு புதுவித ஐபிஎல் போட்டியானது இரண்டு வாரங்களுக்கு யூடியூபில் ஒளிபரப்பானது. இந்த போட்டியை நம்பி சில ரஷ்யர்கள் நேரடி விளையாட்டுகளில் பெட்டிங் கட்டினார்கள். ஆனால் தனது பணம் அனைத்தையும் இழந்த பிறகு தான் அவர்களுக்குத் தெரிந்தது இது ஒரு போலி ஐபிஎல் விளையாட்டு என்று.
கடந்த ஆண்டு 2022 ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு, குஜராத் மாநிலத்திலுள்ள மோலிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நபர்கள், அங்குள்ள வேலையில்லாத இளைஞர்களைப் பயன்படுத்தி, போலி ஐபிஎல் போட்டிகளை நடத்தியிருக்கிறார்கள். இந்த போலி ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டவர்களை பெட்டிங் செய்ய வைக்க, அதற்கென்று தனியாக ஒரு டெலிகிராம் சேனலையும் உருவாக்கி, அதன் மூலம் ரஷ்ய சூதாட்டக்காரர்களைப் பந்தயம் கட்ட வைத்துள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஐபிஎல் போட்டிகளின் விவரங்களை மிகவும் யதார்த்தமாக காட்டுவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
படம் பிடிப்பதற்கு HD கேமராக்கள் பயன்படுத்தப் பட்டது.
கிரவுண்டை சுற்றி ஹாலோஜன் விளக்குகள் வைக்கப் பட்டது.
மேலும் பெரிய அளவில் ஒலி விளைவுகள் சேர்க்கப்பட்டு, உண்மையான கூட்டத்திலிருந்து வரும் சத்தத்தை அப்படியே பிரதிபலித்தது ஸ்பீக்கர்கள்.
குறிப்பாக போட்டியின் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லா போலவே பேசிக்கொண்டிருந்தார்.
ஒரு போட்டியின் நடுவே இரு வீரர்களும் தனது ஜெர்சியை மாற்றிக் கொண்டார்கள்.
ஏன் அம்பையர்கள் கூட கையில் வாக்கி-டாக்கியுடன் மைதானத்தில் நடப்பதைக் காண முடிந்தது.
ஆனால், உண்மையில் சூதாட்டக்காரர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெறுவதற்குதான் வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ரஷ்யர்கள் எதில் பணத்தை பெட் செய்கிறார்களோ, அதன் அடிப்படையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு போட்டிகள் நடந்தது. நடுவர்கள் கொடுக்கும் சிக்னல்களின் அடிப்படையில், பேட்டிங் அல்லது பந்து வீசுபவர்கள் செயல்படுவார்கள்.
இது எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்தது. பலர் இதில் பெட் செய்தார்கள். விளையாட்டின் போக்கிற்கு ஏற்ப சிலர் அதிக பணத்தையும் ஈட்டினார்கள். ஆனால் திடீரென இந்த விளையாட்டு அதன் கால் இறுதி நடக்கும் சமயத்தில் நிறுத்தப்பட்டது. ஏனென்றால், இந்த ஊழல் செய்தவனை போலீசார் பிடித்து விட்டார்கள். 3 லட்ச ரூபாயை ரஷ்ய பெட்டர்களிடமிருந்து வாங்கும்போது அவன் மாட்டிக் கொண்டான்.
அவன் பெயர் சோயப் தேவ்டா. எட்டு மாதங்களுக்கு மேல் ரஷ்ய சூதாட்ட விடுதிகளில் தங்கிய அனுபவம் அவனுக்கு இருந்துள்ளது. அங்கிருந்து தான் இப்படி ஒரு ஊழல் செய்யலாம் என்ற எண்ணம் அவனுக்கு உதித்திருக்கிறது. முதலில் டெலிகிராம் சேனல் வழியாக ரஷ்யர்களிடமிருந்து நேரடி பெட்களைப் பெறுவான். பின்னர் எதில் அதிகம் பெட் செய்கிறார்களோ அது நடக்காதபடி, அம்பயருக்கு வாக்கி டாக்கி வழியாக 4, 6 என சிக்னல் கொடுப்பான். களத்திலுள்ள அம்பையர் அதை பவுலருக்கும் பேட்ஸ்மனுக்கும் சிக்னல் கொடுப்பார். அதற்கேற்றவாறு மெதுவாக பந்து வீசப்பட்டு 4,6 என பேட்ஸ்மேன் அடிப்பார். இப்படித்தான் இந்த ஊழல் தந்திரமாக நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக சில வாரங்களிலேயே கோடிக்கணக்கான ரூபாய்களை இவர்கள் பெற்றிருக்கிறார்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைப் பார்த்தால் Money Heist தொடர் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த அளவுக்கு ஒரு நபரால் உள்ளூர இறங்கி ஒரு செயலை செய்ய முடியுமா என சிந்திக்க வைக்கிறது. இந்த புத்திசாலித்தனத்தை இவர்கள் ஏதாவது நற்செயல்களுக்கு பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.