இந்தியாவில் ஜனவரி மாதம் கிரெடிட் கார்டுகளின் நிலுவை தொகை1.87 லட்சம் கோடி ரூபாய் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
டிஜிட்டல் மயமாக்குதலின் விளைவாக இன்று பணப் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. இந்தியர்கள் பள்ளிக் கட்டணங்கள், ஜிம், மின்சார பில்ம் உணவகங்கள், வீட்டை பராமரிப்பது தொடங்கி அனைத்திற்கும் கிரெடிட் கார்டுகளையே பயன்படுத்துகின்றனர். மக்களுக்கு கிரெடிட் கார்டுகள் மேல் உள்ள ஆர்வம் மட்டும் குறையவில்லை என்பது தான் உண்மை.
இந்தியாவில் ஜனவரி 2023 இல் மட்டும், வெவ்வேறு வங்கிகளால் கிட்டத்தட்ட 8.25 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் தான் நாட்டின் முதல் 5 கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள்.
ஆனால் இந்தியாவில் ஜனவரி மாதம் கிரெடிட் கார்டுகளின் நிலுவை தொகை 29.6 சதவீதம் அதிகரித்து 1.87 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் 10 மாதங்களில் கிரெடிட் கார்டு பயன்பாடுகள் 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், ஜூன் மாதம் அதிகபட்சமாக 30.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.
மக்கள் சமீப காலமாகவே தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி அதிகம் செலவு செய்வதாக எஸ்பிஐ கார்டின் மேலாண்மை இயக்குனர் ராம மோகன் ராவ் அமரா கூறியுள்ளார். 2022 டிசம்பரில் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்பட்ட செலவுகள் ரூ.1.26 லட்சம் கோடியிலிருந்து, இந்த ஆண்டு ஜனவரியில் 1.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் ராம மோகன் ராவ் கூறியுள்ளார். கிரெடிட் கார்டின் வளர்ச்சியானது ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், கடந்த 11 மாதங்களில் இருந்து கிரெடிட் கார்டு செலவுகள் தொடர்ந்து 1-லட்சம் கோடிக்கு மேல் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஜனவரி 2023 இல் கிரெடிட் கார்டுகளின் நிலுவை தொகை வருடாந்திர வளர்ச்சி 29.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், அதன்பின் நிலுவைத் தொகையானது ஜனவரி 2022 இல் ரூ.1,41,254 கோடியிலிருந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 1,86,783 ஆக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.