மேலை நாட்டின் உயர்தர கல்லூரிகளில் படிக்கும் ஆசையுடன் மாணவர்கள் விரும்பிச் செல்லும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.
2023ஆம் வருடம் 9,75,229 மாணவர்கள் உலகின் பல பாகங்களிருந்து ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புத் தொடர விசா பெற்றிருக்கிறார்கள். இதில், இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 1,22,391.
ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பு படிக்க வரும் மாணவர்களில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்தியாவிலிருந்து, அயல்நாட்டில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள், படிக்க தேர்ந்தெடுக்கும் நாடுகளில், ஆஸ்திரேலியாவிற்கு மூன்றாவது இடம்.
ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க விரும்புகிறது அரசு. அந்த நாட்டில் வீட்டு வசதித் துறையில், குடியிருக்க வீடு கிடைப்பதில் கடுமையான நெருக்கடி நிலைமை நிலவுகிறது.
இதற்கு முதல் காரணம், வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுபவ்ரகள் எண்ணிக்கை அதிகமாவது என்று அரசு கருதுகிறது. இந்த நிலைமையை, சீர் செய்வதற்கு விசா அனுமதியுடன் நாட்டிற்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது அத்தியாவசியமாகிறது.
இதனால் மாணவர் விசா அனுமதி நடைமுறை சற்றே கடுமையாக்கப் பட்டுள்ளது. மேற்படிப்பு படிக்க விழையும் மாணவர்கள் IELTS தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வில் 6 அல்லது 6.5 மதிப்பெண் பெற வேண்டும். ஆனால், சில கல்லூரிகளில் குறைந்த பட்ச மதிப்பெண் 7 இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில், 7க்கும் மேல் மதிப்பெண் எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப் போலவே மாணவர் நிதித் தேவையும் உயர்த்தப்பட்டுள்ளது. நிதித் தேவையாக இருந்த 24,505 ஆஸ்திரேலியன் டாலர் (13,79,386 ரூபாய்) தற்போது 29,710 டாலர் (16,72,376 ரூபாய்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற நாடுகளிலிருந்து விசாவிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விசா தாமதமாகிறது அல்லது மறுக்கப்படுகிறது. இந்திய மாணவர்கள் விசா தாமதமாவதால், ஒரு சில ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்கள், இந்திய மாணவரை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. டிசம்பர் 2022 முதல் டிசம்பர் 2023 வரையில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசா, போன வருடத்தை விட 48 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் படிக்க விழையும் மாணவர்களூக்கு பேரிடியாக, விசா கட்டணம் இரு மடங்கிற்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. 710 ஆஸ்திரேலியா டாலர் (39,965 ரூபாய்) என்றிருந்த விசா கட்டணம் 1,600 டாலர் (90,063 ரூபாய்) என்று உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் அதிக அளவில் படிக்கச் செல்லும், அமெரிக்கா மற்றும் கனடாவின் விசா கட்டணத்தை விட இது அதிகம். இதைத் தவிர, பார்வையாளர் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள், ஆன்ஷோரில் மாணவர் விசா விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி நாட்டு மாணவர்கள் விசா நீட்டிப்பைத் தடுக்கவும், நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. இந்த மாற்றங்களால், அதிக கல்வித் தரம் கொண்ட மாணவர்கள் சேர்ந்து, ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களின் தரம் மேலும் உயரும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.
பல நாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வருவது அவர்களின் பொருளாதாரத்திற்கு உதவி செய்கிறது. கடந்த நிதியாண்டில் (2022-2023) கல்வித் துறையின் மதிப்பு 36.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2,04,896 கோடி ரூபாய்).
ஆகவே, இந்த மாற்றங்களால், பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்றும், உண்மையாக மேல் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு விசா வழங்குவதுடன், கல்வித் தரம் உயர்ந்து அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றும் ஆஸ்திரேலிய அரசு எதிர் பார்க்கிறது.