குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் கௌரவ காந்தி என்ற பிரபல இதய அறுவை சிகிச்சை டாக்டர், தனது 41 வயதில் மாரடைப்பால் காலமானார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் 'கௌரவ காந்தி' இவருடைய வயது 41 இருதய அறுவை சிகிச்சை பிரிவில் பிரபலமாக விளங்கி வருபவர். இவரது சொந்த ஊர் அகமதாபாத். ஜாம் நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த, இவர் மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளைச் செய்து பிரபலமாக இருந்துள்ளார். அதாவது, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளார்.
டாக்டர் கௌரவ்காந்தி எப்பொழுதும் காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். ஆனால் அவர் இன்று எழவில்லை. அவரின் மனைவி எழுப்ப முயற்சி செய்தும், மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே கௌரவ காந்தியின் உடலை சோதித்துப் பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவருடைய உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மருத்துவர் காந்தி, கிரிக்கெட் விளையாடுவது ஜிம் செல்வது என தன்னை எப்போதுமே ஆக்டிவாக வைத்துக் கொண்டிருப்பார் என அவருடன் பணியாற்றும் சக டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவருக்கு ஏன் மாரடைப்பு ஏற்பட்டது என்பதை அறிவதற்கு அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இவருக்கு ஜூன் 6ஆம் தேதி இரவு 2 மணியளவில் சிறிய நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அங்கே இசிஜி எடுத்துப் பார்த்தபோது நார்மல் என்றே வந்துள்ளது. எனவே நமக்கு ஏதாவது அசிடிட்டி பிரச்சனையாக இருக்கும் என நினைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த மறுநாள் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தால் 20% முதல் 30% நபர்களுக்கு இசிஜி-ல் தெரியாமல் போனாலும் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நவீன உலகில், வேலை-வாழ்க்கை சமநிலையை சீர்குலைக்கும் பரபரப்பான மற்றும் போட்டி நிறைந்த தொழில் வாழ்க்கையை இளைய சமுதாயம் துரத்த முனைகின்றனர். நீண்ட நேரம் பணிபுரிவது, ருசிக்காக சோடியம், ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது. உடற்பயிற்சிக்கும் உறக்கத்திற்கும் சரியான நேரம் கொடுக்காமல் இருப்பது, அதிக அளவில் புகைப்பிடிப்பது போன்ற விஷயங்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இதை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால், மாரடைப்பு நிலைக்கு கொண்டு செல்லும்.
அதிக அளவில் மனஅழுத்தம் மற்றும் டென்ஷன் போன்றவற்றால், உடலில் அழுத்தம் தொடர்பான ஹார்மோன்கள் வெளியாகும். இப்படி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகள் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதைக் கண்டு கொள்ளவில்லை என்றால், நிலைமை மோசமடைந்து பக்கவாதம் அல்லது இதயச் செயலிழப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இப்படி, ஆயிரக்கணக்கானோருக்கு இருதய ஆபரேஷன் செய்த டாக்டரே மாரடைப்பால் இருந்திருப்பது குஜராத் மக்களை தற்போது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.