உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியும், அதுகுறித்தான செய்திகளும் சமீபத்தில் அதிகம் வெளியாகிக்கொண்டிருக்கிறன. அந்தவகையில் உதயநிதி இதுகுறித்து ஏன் ரஜினியிடமெல்லாம் கேட்கிறீர்கள் என்று காட்டமாக பேசியுள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடந்து வரும் 'கூலி' படப்பிடிப்பில் பங்கேற்ற பின், நடிகர் ரஜினி சென்னை திரும்பினார். விமான நிலையத்தில், 'அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆவாரா' என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் டென்ஷன் ஆன ரஜினி, "அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்," என கடிந்து கொண்டார்.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசினார். அதாவது, “நான் யூட்யூபில் ஒரு வீடியோவின் தம்ப்நெயில் பார்த்து பயந்தே போய்விட்டேன். அதாவது உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேசம்… என்றிருந்தது. இது என்னை திடுக்கிட செய்துவிட்டது. நான் துணை முதலமைச்சர் ஆகப்போகிறேனா என்பது குறித்து இன்னும் அறிவிப்பே விடவில்லை. இதுபற்றி முதலமைச்சர்தான் கூற வேண்டும். இதுபற்றி என்னிடம் கேட்கிறீர்கள் சரி… ஏன் சாலையில் வருவோர் போவோரிடமெல்லாம் கேட்கிறீர்கள்.
ரஜினி சாரெல்லாம் பாவம். அவர் படபிடிப்பிற்கு போக வேண்டிய அவசரத்தில் இருக்கிறார். ஃப்லைட் டைம்மாச்சு என்ற அவசரத்தில் வேகமாக போய்க்கொண்டிருப்பவரிடம் மைக்கை நீட்டி அதே கேள்வியை கேட்கிறீர்கள். அவர் அவசரத்தில் அரசியல் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டார்.
அவர் சொன்னது என்ன, ஆனால் தம்ப்நெயிலில் வைத்தது என்ன? இதனால், தம்ப்நெயில் படிப்பவர்களுக்கு என்னத் தோன்றும். ரஜினி அவேசம் என்றுதான் தோன்றும். அதனால் பத்திரிக்கை நண்பர்களே பார்த்து பதிவிடுங்கள். இதற்கும் எப்படி பதிவிடுவீர்கள்... உதயநிதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பதிலடி.. அப்படீன்னு வைப்பீர்கள்..” என்று பேசினார்.
சமீபத்தில், தமிழக மூத்த அமைச்சர் துரைமுருகன் குறித்து ரஜினி பேசி, அது சர்ச்சையானது. அதையடுத்து, அரசியல் செய்திகளில் கவனமாக இருக்க முடிவெடுத்திருக்கும் ரஜினி, உதயநிதி பற்றி கேட்டதும் டென்ஷனானார். மற்றபடி உதயநிதி மீது அவருக்கு எந்த கோபமும் கிடையாது என ரஜினி ஆதரவாளர்கள் கூறினர்.