கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் பாடல்களை டிரம்ஸ் மூலம் இசைத்து சிவமணி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தார். ஓவ்வொரு வருடமும் ட்ரம்ஸ் சிவமணி இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் இம்முறையும் இரு முடி கட்டி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசித்தார். அப்போது தான் ஐயப்ப பக்தர்களை தனது டிரம்ஸ் இசை மூலம் மகிழ்வித்தார்.
கடந்த வாரம் வியாழக்கிழமையன்று கார்த்திகை மாதம் துவங்கியதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் பெருந்திரளாக கூடி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில், மண்டல பூஜைக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு வெகுவிமரிசையாக மண்டல பூஜைகலால் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் சபரிமலையில் தரிசனத்திற்காக 87 ஆயிரத்து 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதேபோல் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதுவரை 7 லட்சம் பக்தர்களுக்கு மேல் சபரிமலையில் ஐயப்பனை தரிசித்துள்ளனர்.
அங்கிருந்த ஐயப்ப பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடைபந்தலில் உள்ள மேடையில் டிரம்ஸ் இசை மூலம் ஐயப்பனின் புகழ் இசையை இசைத்து காட்டினார். டிரம்ஸ் சிவமணியின் இசையை அங்கிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.