ஒரு பக்கம் தக்காளி விலையேற்றத்தால் அவதியுறும் நிலை இருக்க, மறுபக்கம் அதிக விளைச்சலால் தேங்காய்களுக்கு தகுந்த விலை கிடைக்காமல் அவற்றை கொப்பரையாக்கி வருகின்றனர் தென்னை மரங்களை வளர்க்கும் விவசாயிகள். இதனால் போட்ட காசை எடுப்பதுடன் லாபமும் கிடைப்பதாக மகிழ்கின்றனர்.
தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை, கோபிசெட்டிபாளையம், திருநெல்வேலி, உள்பட பல பகுதிகளில் தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இப் பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய்களை விவசாயிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் அனுப்புவதோடு கேரளா ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத் மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இதன் காரணமாக வழக்கத்தை காட்டிலும் கடந்த இரண்டு மாதமாக தேங்காய் வரத்து 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஆகவே, தேங்காயாக விற்பனை செய்வதை விட அதைக் காயவைத்து கொப்பரையாக மாற்றி விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மதிப்பு கூட்டி கொப்பரையாக விற்கும் போது சற்று லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சேலம் சேர்ந்த விவசாயிகள் கூறியது. “சேலம் உள்பட நான்கு மாவட்டங்களில் பரவலாக தென்னை மரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 டன் தேங்காய் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு போதிய மழை இல்லாததால் தமிழக முழுவதும் பல்லாயிரம் தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்தன. இதனால் அந்த ஆண்டு தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் தேங்காய் விளைச்சல் அதிகரித்து கடந்த ஐந்தாண்டுகளாக பரவலாக மழை இருந்து வருவதன் காரணமாக தேங்காய் விளைச்சலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் போனது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி, ஆடி மாதங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரிக்கும். இந்த மாதங்களில் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை காட்டிலும் தேங்காய் வரத்தும் அதிகரிக்கும். இம்முறையும் அதிகரித்துள்ள வரத்தால் தேங்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
தற்போது தேங்காய் வரத்து அதிகரிப்பால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதனால் கடும் நஷ்டம் ஏற்படுகிறது. கஷ்டத்திலிருந்து தப்பிக்க பல விவசாயிகள் தேங்காயை உடைத்து காய வைத்து கொப்பரையாக விற்பனை செய்கின்றனர். கொப்பரையாக விற்பனை செய்யும் போது ஓரளவுக்கு லாபம் கிடைத்து வருகிறது. எங்களிடம் கொப்பரை வாங்குபவர்கள் அதை தேங்காய் எண்ணெய் அரவை ஆலைகளுக்கு அனுப்புகின்றனர். அரவை ஆலைகளில் கொப்பரை வரத்து அதிகரிப்பால் தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் சற்று அதிகரித்துள்ளது என்றனர்.
ஒன்று ஏறினால் ஒன்று இறங்கும் என்பது தக்காளி, தேங்காய் விசயத்தில் சரியாகத்தான் உள்ளது.