மும்பையில் நேற்று மாலை திடீரென மோசமான புழுதிப் புயல் ஏற்பட்டதில் ராட்ச பேனர் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் புழுதிப் புயலுடன் சேர்ந்து மழையும் பெய்தது. மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ள இடத்தில் இரும்பு சாரங்களுடன் 100 அடி உயர விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை வீசிய புயலால், அந்த விளம்பர பேனர் சரிந்து விழுந்தது.
இதில் அருகிலிருந்த வீடுகள் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவை நொறுங்கின. மேலும் சிலர் அந்த பேனருக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். விவரம் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பேனரிலிருந்து மீட்கப்படும் போதே சடலமாகத்தான் மீட்கப்பட்டனர்.
அதன்பின்னர் தொடர்ந்து மீதமுள்ளவர்களை நேற்று முழுவதும் மீட்டனர். அதில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர் என்பதுத் தெரியவந்தது. இதனால் உயிரழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இச்சம்பவத்தில் 74 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளம்பர பேனர் வைத்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மகாராஷ்திரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும். மும்பையில் உள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் உடனே ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவித்தார்.
நேற்று ஏற்பட்ட மிக மோசமான புழுதிப் புயலுடன் மழை பெய்ததால், மும்பை விமான நிலையத்தின் விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக, தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்தது.