ஜப்பானில் நங்காய் பள்ளத்தாக்கு பகுதியில் பெரியளவு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதில் அதிகளவு உயிர்சேதங்கள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ரிங் ஆஃப் ஃபையர் பகுதியில்தான் ஜப்பான் இருக்கிறது. உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் சுமார் 90 சதவீத நிலநடுக்கம் இங்குதான் ஏற்படுகிறது. சமீபத்தில்தான் ஹியுகனாடா கடலில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்பின் அங்கே வரும் நிலநடுக்கம் மிகப்பெரியதாக இருக்கும் எனவும், இதனையடுத்து சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜப்பானின் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்காய் பகுதி என்பது பிலிபைன்ஸ் கடல் தட்டு இருக்கும் ஒரு டெக்டோனிக் ஹாட்ஸ்பாட் ஆகும். இதனால், அங்கே 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டு மெகா பூகம்பம் வரும். இந்தக் கணக்குப்படி பார்த்தால், இன்னும் சராசரியாக 30 ஆண்டுகளில் அந்த மெகா நிலநடுக்கம் வந்து நாட்டையே உலுக்கிவிடும் என்று ஆய்வுகள் கணிக்கின்றன.
இந்த கணக்கு சரியாக இருந்து நிலநடுக்கம் ஏற்பட்டால், 100 அடி உயரத்திற்கு சுனாமி ஏற்பட்டு கடலோர பகுதிகள் முழுமையாக அழிந்துவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் எப்போதும் சுனாமி ஏற்படும்போது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல சில நேரம் கிடைக்கும். ஆனால், இந்த மெகா சுனாமி ஏற்படுபோது மக்கள் வெளியேற சில நிமிடங்கள் மட்டுமே இருக்குமாம். இதனால், உயிர்சேதம் அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக ஷிசுவோகா பகுதியை சுனாமி முழுவதுமாக அழிக்க இரண்டு நிமிடங்களே போதும் , வகாயாமா பகுதிக்கு 3 நிமிடங்களே போதும், கொச்சி நகரத்திற்கு ஐந்து நிமிடங்கள் போதும் என்று கணிக்கின்றனர்.
இதனிடையே அதிக ஆபத்துள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானின் 29 மாகாணங்களில் உள்ள 707 நகராட்சிகளை அந்த நாடு அதிக ஆபத்துள்ள இடங்களாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக 2.31 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும். அதேபோல், 207.8 டிரில்லியன் அளவு பொருளாதார சேதம் ஏற்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஜப்பான் அரசு படிபடியாக எச்சரிக்கைகளை விட திட்டமிட்டுள்ளது. இப்போது 'மெகா த்ரஸ்ட் பூகம்ப அலர்ட்' விட்டுள்ளது. இதன்மூலம் ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாசவசிய பொருட்களை எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.