அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு கமெங் மாவட்டத்தில் இன்று மதியம் 12.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது.
மேற்கு கமெங் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இதற்கு முன்பு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது அப்போது முதல் வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்படுகிறது. இன்று அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் குறித்து கடந்த சில நாட்களாகவே விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என் பூர்ணச்சந்திர ராவ், ஹிமாச்சல் மற்றும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கு இடையே உள்ள நிலநடுக்க அதிர்வின் இடைவெளியை வைத்து பார்க்கும் பொழுது, உத்தரகாண்டில் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இயக்கத்தில் உள்ள 8 பெரிய புவித்தட்டுகளில் ஒன்றான இந்திய பலகை, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 சென்டிமீட்டர் நகர்ந்து வருவதாக சொல்கிறார்கள். இவ்வாறு நகர்வது இமயமலையில் அழுத்ததை அதிகரிக்கிறது என்றும் இது மிக பெரிய பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிப்பதாக கூறியுள்ளார்.