அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நேற்றை தினம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றையை தினம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார், அதில் “அமைச்சர் செந்தில் பாலாஜின் கைது அப்பட்டமாக அரசியல் பழிவாங்கும் செயல் திமுகவினரை சீண்டிப் பார்க்கவேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் 'அடிமை' பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியை தங்களின் கொத்தடிமைகளாக ஆக்குவதற்கு கடந்த 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பல்வேறு ரெய்டுகளை இதே பா.ஜ.க. ஆட்சி நடத்தி உள்ளது. ரெய்டு நடத்தினார்களே, எந்த வழக்கையாவது நடத்தினார்களா? குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்களா? தண்டனை வாங்கித் தந்தார்களா? இல்லையே! என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ- என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் பாஜக டப்பிங் செய்து வருகிறார்கள் என்றார்.
இந்நிலையில், முதலமைச்சரின் இந்த கருத்து எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை முதல்வர் சீண்டிப் பார்க்கக்கூடாது. திமுகவுடன் கூட்டணியில் இருப்பவர்கள் இந்த ஊழலுக்கு துணைப் போகக் கூடாது. வரும் நாட்களில் மக்களை சந்திக்க வேண்டும் என்பதை மனதில் வைத்திக் கொள்ளுங்கள். அதிமுகவை பாஜகவின் அடிமை கட்சி என முதல்வர் கூறுகிறார்.
இதே பாஜகவுடன் 1999 -ல் திமுக கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லையா? காலத்திற்கு ஏற்றார்போல திமுக பச்சோந்தி போல செயல்படும். நாங்கள் யாருக்கும் அடிமையானவர்கள் அல்ல சொந்த காலில் நிற்பவர்கள் என தெரிவித்துள்ளார்.
அதேபோல், முதலமைச்சரின் வீடியோ தொடர்பாக, கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், மாநிலத்தின் முதல்வர் எங்களை யாரும் மிரட்டிப்பார்க்க முடியாது, பணிய வைக்க முடியாது எனக் கூறி வருகிறார். அவர் மத்திய பாஜக அரசை சொல்கிறாரா?, இல்லை தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தை கூறுகிறாரா? என புரியவில்லை. அரசியல் ரீதியாக பாஜக மீது பழி சுமத்த முடியுமா என முதல்வர் பார்க்கிறார். அவரை துன்புறுத்துகிறார்கள் எனக் கூறும் இவர்கள் அவர் தவறு செய்யவில்லை என எங்கேனும் கூறி இருக்கிறார்களா? செந்தில் பாலாஜி குற்றமற்றவர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா? நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மனப்பாங்கிலிருந்து முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் முதலில் வெளியில் வரவேண்டும். குற்றம் செய்பவர்களின் மாமன், மச்சான், மாப்பிள்ளை யாராக இருந்தாலும் சட்டப்படி அவர்கள் எதை எதிர் கொள்ள வேண்டுமோ அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி ஆட்சி கிடையாது, நீதிமன்றம். சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. மத்திய அரசில் இருக்கின்ற ஒவ்வொரு துறையும் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தத் துறைகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் கூட பாஜகவினரே இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார்கள், பணமதிப்பிழப்பு உட்பட பல்வேறு விஷயங்களில் தவறு செய்திருந்தால் கூட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவில்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள்” என கூறியுள்ளார்.