பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் கோட்டையான குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றிபெற்றதும், 13 சதவீத வாக்குகள் பெற்றதும் சாதனைதான் என்கிறார் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
"ஒரே ஆண்டில் பஞ்சாபில் ஆட்சியை அமைத்தோம். தில்லி மாநகராட்சித் தேர்தலில் அமோக வெற்றிபெற்றோம். கோவா தேர்தலில் 2 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றுள்ளோம். இப்போது குஜராத்தில் 5 இடங்களை வென்றதுடன் 13 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். 'எல்லோரும் பசுமாட்டின் பாலைத்தான் கறப்பார்கள். ஆனால், நீங்கள் எருமை மாட்டின் பாலையே கறந்துவிட்டீர்கள்' என்று ஒருவர் என்னிடம் குறிப்பிட்டார்.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியதுபோல 2027 இல் குஜராத்தில் பா.ஜ.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிப்போம்.
2017 –இல் குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் ஆம் ஆத்மி 29 இடங்களில் போட்டியிட்டது. பஞ்சாபில் 117 இடங்களில் 112 இடங்களில் போட்டியிட்டது. குஜராத்தில் 29 தொகுதிகளிலும் தோல்வியுற்று டெபாசிட் இழந்தது. ஆனால், பஞ்சாபில் 20 இடங்கள் கிடைத்தன. ஆனால், இந்த முறை நடந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் 92 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தோம். காங்கிரசுக்கு வெறும் 18 இடங்களும், பா.ஜ.க. 2 இடங்களில் மட்டுமே வென்றது.
குஜராத் தேர்தலில் ஐந்து இடங்கள் கிடைத்துள்ளன. தில்லி மாநகராட்சித் தேர்தலில் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு ஆம் ஆத்மி முடிவு கட்டியுள்ளது.
குஜராத் தேர்தலில் 5 இடங்களை வென்றதன் மூலம் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக உயர்ந்துள்ளது. இதற்கு கட்சியின் கொள்கைகளும், களப்பணியுமே காரணமாகும்.
உலக அளவில் சிறந்த கல்விக்களமாக இந்தியா உருவெடுக்க வேண்டும். பசியுடன் யாரும் தூங்கக்கூடாது. ஏழைகளுக்கு தரமான கல்வியும், மருத்துவ வசதியும் கிடைக்கவேண்டும். இது எங்கள் கட்சியின் பிரதான நோக்கமாகும்.
எங்கள் கட்சியில் வகுப்புவாத அரசியலுக்கு இடமில்லை. அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே நாடு முன்னேறும். எந்த ஒரு கட்சியாவது சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டால், அக்கட்சிக்கு நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லை என்றுதான் அர்த்தம்" என்றார்ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.