இந்தியாவில் உள்ள பெட்ரோல் பம்புகள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் முக்கிய மையங்களாக செயல்படுவது மட்டுமின்றி பொதுமக்களுக்கு பரந்த அளவிலான சில சேவைகளையும் வழங்குகின்றன. எரிபொருள் விநியோகம் அவர்களின் முதன்மை செயல்படாக இருந்தாலும், ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய கூடுதல் வசதிகள் இருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் உத்தரவு. வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் வசதிக்காக இந்திய பெட்ரோல் பம்புகளில் சில சேவைகள் இலவசமாக இருக்க வேண்டும்.
காற்று நிரப்பும் இயந்திரம்: வாகனங்களில் சரியான டயர் அழுத்தத்தை பராமரிப்பது சாலை பாதுகாப்பு மற்றும் எரிபொருளை சேமிப்பதற்கு மிகவும் முக்கியமானது. இதனால் இந்தியாவில் உள்ள பெட்ரோல் பம்புகளில் ஏர் கம்ப்ரஸர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இதற்காக தனியாக ஒரு நபரையும் பணியில் அமர்த்த வேண்டும் என்பது அரசாங்க உத்தரவு.
குடிநீர் வசதிகள்: இந்தியா முழுவதும் உள்ள மாறுபட்ட தட்பவெட்ப நிலைகளைக் கருத்தில்கொண்டு பெட்ரோல் பம்புகளில் சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அவசியம். நீண்ட தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு நீரேற்றம் முக்கியமானது என்பதால், இந்த வசதியை அனைத்து பெட்ரோல் நிலையங்களும் வழங்க வேண்டும்.
கழிவறை வசதிகள்: லாங் டிரைவிங் செய்பவர்களுக்கு அவ்வப்போது இயற்கை உபாதைகளைக் கழிப்பது அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக இந்தியாவில் உள்ள எல்லா பெட்ரோல் பம்புகளிலும் சுத்தமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய கழிவறை வசதிகள் இருப்பது அவசியம்.
அடிப்படை வாகன பராமரிப்பு கருவிகள்: எல்லா பெட்ரோல் பம்புகளிலும் டயரின் அழுத்தத்தை அளவிடும் கருவிகள், கண்ணாடியை சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் புனல்கள் போன்ற அடிப்படை வாகன பராமரிப்பு கருவிகள் இருக்க வேண்டும். இவை வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும், கண்ணாடிகளை சுத்தம் செய்யவும் உதவியாக இருக்கும்.
முதலுதவிப் பெட்டி: முதலுதவிப் பெட்டி என்பது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டிய ஒரு அத்தியாவசியப் பொருளாகும். அதுவும் சாலையோரங்களில் இருக்கும் பெட்ரோல் பம்புகளில் இவை கட்டாயம் இருக்க வேண்டும். இதன் மூலமாக ஆபத்துக் காலங்களில் மருத்துவ உதவி தேடுவோருக்கு உதவ முடியும். இதையும் இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
இனி நீங்கள் ஏதேனும் பெட்ரோல் பம்ப் செல்கிறீர்கள் என்றால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இவை இல்லாத பெட்ரோல் பம்புகள் மீது புகார் அளிக்கலாம்.