தமிழ்நாட்டின் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் பிறந்து இந்தியத் திரையுலகில் நுழைந்து தன் அழகாலும் தேர்ந்த நடிப்பாலும் ஆண் பெண் வயது வித்யாசம் பாராமல் அனைவரையும் கவர்ந்த சாதனை நட்சத்திரம் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமான இவர் தமிழின் அனைத்துக் கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து முன்னணிக் கதாநாயகியாக யாரும் அசைக்க முடியாத இடம் பெற்றவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர். நவரசத்தையும் தன் அழகிய கண்கள் மூலமாகவே காட்டும் திறமை இவரிடம் உண்டு.
தமிழக நடிகைகள் புறக்கணிக்கப்பட்ட இந்தித் திரையுலகிலும் நுழைந்து கனவுக்கன்னியாக வெற்றிக் கொடி நாட்டியவர். பின்னாளில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதல் திருமணம் செய்து மும்பையில் வசித்தார். இவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரும் தற்போது ஹீரோயினாக நடித்து வருகின்றனர். 2000 ஆண்டில் திரையுலகிலிருந்து விலகிய ஸ்ரீதேவி மீண்டும் 2012 ல் இங்கிலீஷ் விங்க்லீஷ் படத்தில் என்ட்ரீயாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். இறுதியாக அவர் நடித்த மாம் எனும் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். ஆனால் 2018 ல் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் நிகழ்ந்த எதிர்பாராத இவரின் மறைவு ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் 60 தாவது பிறந்த நாள் (12-8-23) ரசிகர்களால் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்த நாளில் கூகுளும் ஒரு கவர்ச்சியான டூடுலுடன் அவருக்கு கவுரவம் அளித்தது வைரலாகியது. கூகுள் டூடுல் ஸ்ரீதேவி நடித்த சினிமாவின் சாராம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக நடன பாவங்களை சித்தரித்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. இந்த கலைப்படைப்பை உருவாக்கியதற்காக மும்பையைச் சேர்ந்த கலைஞர் பூமிகா முகர்ஜிக்கும் இதன் மூலம் கூகுள் பெருமை சேர்த்துள்ளதை குறிப்பிட வேண்டும்.
தமிழ் நாட்டு நடிகை ஒருவருக்கு உலக அளவில் பிரபலமான கூகுளால் இந்த அங்கீகாரம் கிடைத்ததை எண்ணி நாமும் பெருமிதம் கொள்ளலாம்.