செய்திகள்

தாஜ்மஹாலில் 3 நாட்களுக்கு எல்லாமே ஃப்ரீதான்!!

கல்கி டெஸ்க்

ஷாஜகானின் 368வது நினைவு தினத்தை முன்னிட்டு   பிப்ரவரி 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை  மூன்று நாட்களுக்கு மட்டும் தாஜ்மஹாலை கட்டணம் இன்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி தாஜ்மஹாலுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகளையும் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலின் அழியா சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்வது தாஜ்மஹால். இந்த தாஜ்மஹாலை  ஷாஜகான் தனது காதல் மனைவிக்காக கட்டினார். இதனை கண்டுகளிக்க இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.

முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஷாஜகான். மேவாரின் இராசபுத்திரர்கள் மற்றும் தக்காணத்தின் லோடிக்களுக்கு எதிரான இராணுவப் படையெடுப்புகளில் ஷாஜகான் பங்கெடுத்தார். 1627-ம் ஆண்டு அக்டோபரில் ஜஹாங்கீரின் மரணத்திற்குப் பிறகு தனது தம்பி சகாரியார் மிர்சாவைத் தோற்கடித்த பிறகு, ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் பேரரசராகத் தனக்கு மகுடம் சூட்டிக்கொண்டார்.

இவர் செங்கோட்டை, ஷாஜகான் மசூதி மற்றும் தாஜ்மகால் ஆகிய பல்வேறு நினைவுச்சின்னங்களைக் கட்டினார். தாஜ் மகாலில் இவரது விருப்பத்துக்குரிய மனைவியான மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்டார். ஜனவரி 22, 1666 அன்று, அவர் தனது 74 வயதில் இறந்தார். அவர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் அடக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் ஷாஜகானின் 368வது நினைவு நாளையொட்டி, பிப்ரவரி 17 முதல் 19 வரை தாஜ்மஹாலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

17,18 ஆம் தேதிகளில் ஷாஜஹானின் கல்லறையில் சந்தனம், மலா்கள், போா்வைகள் வைப்பது போன்ற வழக்கமான நடைமுறைகள் நடைபெறும். 19 ஆம் தேதி 1,880 மீட்டா் நீளம் போா்வை ஷாஜஹானின் கல்லறையில் போா்த்தப்படும். ஷாஜஹான், மும்தாஜை போற்றி கவாலி பாடல்கள் பாடப்படும்.

இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் தாஜ்மஹாலுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள ஷாஜஹான், மும்தாஜின் கல்லறையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட அனுமதிக்கப் படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 நாட்களும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வரலாற்றுச் சின்னம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT