தென்னகத்தின் பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் உடல் நலக் குறைவால் நேற்று ஐதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில், ‘கே.விஸ்வநாத் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் சினிமா உலகில் பன்முக படைப்பாற்றலைக் கொண்ட தலைசிறந்த இயக்குநர். அவரது படங்கள் பல தசாப்தங்களாக பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி’ என்று பதிவிட்டுள்ளார்.
கே.விஸ்வநாத்தின் உடல் ஐதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கே.விஸ்வநாத் மறைவுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகர்கள் கமல்ஹாசன், சிரஞ்சீவி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில், ‘விஸ்வநாத்தின் கலைப் படைப்புகள் அவரது காலத்தையும் தாண்டி பேசப்படும். சல்யூட் டு மாஸ்டர்’ என்று பதிவிட்டுள்ளார்
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்திலுள்ள பெத்த புலிவரூ கிராமத்தில் 1930ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி விஸ்வநாத் பிறந்தார். சென்னை வாஹினி ஸ்டூடியோவில் தனது தந்தையைப் பின்பற்றி சினிமா துறையில் நுழைந்தார். நடிகர் கமல்ஹாசனை வைத்து தெலுங்கு சினிமாவில் தான் எடுத்த, 'சாகர சங்கமம்' படம் தமிழில் 'சலங்கை ஒலி' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்தத் திரைப்படத்தின் மூலம் விஸ்வநாத் தமிழிலும் புகழ் பெற்றார்.
இயக்குநர் கே.விஸ்வநாத் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 51 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி, கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், ரஜினியின் லிங்கா, விஜய்யின் பகவதி, புதிய கீதை, தனுஷுடன் யாரடி நீ மோகினி, விக்ரமுடன் ராஜபாட்டை போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது கலை சேவையைப் பாராட்டி இவருக்கு நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர, 2016ஆம் ஆண்டு 'தாதா சாஹேப் பால்கே' விருதையும் இவர் வென்றுள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த, 'சுவாதி முத்யம்' திரைப்படம் 1986ம் ஆண்டு 56வது ஆஸ்கர் திரைப்படத் தேர்வுக்கு இந்தியாவால் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் இயக்குநர் கே.விஸ்வநாத் மரணத்தை தழுவியுள்ளார்.