தவெக மாநாடு நாளை பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் நேரத்தில் திடீரென்று 100 நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறி பாமகவில் சேர்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியைத் தொடங்கினார். அதன்பின்னர் கட்சியினர் கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி சமீபத்தில் கட்சி கொடி மற்றும் சின்னம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. நடிகர் விஜய் தனது 69வது படத்துடன் சினிமா துறையை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து கட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன.
இந்தக் கட்சியின் முதல் மாநாடு நாளை 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது.
மாநாடு நடக்கும் இடத்தில் பெரிய பெரிய பேனர்கள், கட்டவுட்கள் எல்லாம் வைக்கப்படுகின்றன. பெரிய கொடிக்கம்பம் முதல் அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தவெக மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றன.
மறுபக்கம் விஜய், மக்கள் வரும் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பேன் என்று கூறியிருக்கிறார். இப்படியான சமயத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்த 100 உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் பாமகவில் ராமதாஸ் முன்னிலையில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் நாளைய மாநாட்டில் விஜய், தனது கட்சியின் நோக்கங்கள், கொள்கைகள், திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் இடையே உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கப்பட்ட பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். இந்த மாநாட்டில், விஜய்க்கு நெருக்கமான திரையுலகக் கலைஞர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்பர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளைச் சாராத பிரபலங்கள் சிலரையும் விஜய் தன் கட்சியில் இணைப்பது குறித்த அறிவிப்பை இந்த மாநாட்டில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் நிர்வாகிகள் விலகல் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.