செய்திகள்

நேற்றிரவு 9 மணி வரை விறுவிறு வாக்குப்பதிவு - இன்னும் என்னென்ன சாதனைகளை செய்யப்போகிறார்களோ, ஈரோடு மக்கள்?

ஜெ. ராம்கி

தமிழக தேர்தல் வரலாற்றில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. 70 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இனி இதையும் படித்தாக வேண்டிய கட்டாயம் இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆளுங்கட்சி போட்டியிடாத ஒரு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இத்தனை பேர் பிரச்சாரத்தில் இறங்கியதில்லை.

கட்சி ஆரம்பித்து 70 ஆண்டுகள் ஆனாலும் இடைத்தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் வெற்றிக்கொடியை பறக்க விட்டிருக்கிறது. இம்முறை இரட்டை இலை சின்னம் போட்டியிடுமா என்கிற கேள்வியில்தான் தேர்தல் பிரச்சாரமே ஆரம்பமானது. அ.தி.மு.கவின இரு தரப்பினரும் ஆளுக்கொரு வேட்பாளரை அறிவித்து விட்டு, தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் படையெடுத்து சென்றார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் ஊடகச் செய்திகளில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரதான இடத்தைப் பெற்றது. தி.மு.கவும் பா.ஜ.கவும் இடைத்தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அரசியல் போக்கை தீர்மானிக்கும் இடத்தில் தொடர்ந்து இருந்தார்கள். தி.மு.கவும் அ.தி.மு.கவும் தேசியக்கட்சிகளை தவிர்க்க முடியாமல் தங்களது பிரச்சாரங்களில் இணைத்துக்கொண்டார்கள்.

2 லட்சத்து 27 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ள தொகுதியில் தினந்தோறும் திருவிழா நடந்தது. விருந்து, பரிசுப் பொருட்கள் என வாக்காளர்களுக்கு வீடு தேடி வந்து குவிந்தன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பும் வாக்காளர்களை கவர்ந்திட தினமும் ஒரு ஐடியாவோடு வந்தார்கள். பட்டி பிரச்சாரம் பற்றியெல்லாம் நிறையவே படித்துவிட்டோம்.

எந்தவொரு தேர்தலிலும் ஆறு மணிக்கு மேல் வாக்குப்பதிவு அனுமதிக்கப்படுவதில்லை. இறுதியாக வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். பின்னர் வாக்குச் சாவடியின் கதவுகள் அடைக்கப்படும். வரிசையில் நிற்பவர்கள் ஒரிரு மணி நேரத்தில் வாக்குகளை செலுத்திவிட்டு வந்துவிடுவார்கள். எப்படியிருந்தாலும் 7 மணிக்குள் வாக்குப் பதிவு நிறைவடைந்து விடும்.

ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் ஐந்தரை மணிக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் வாக்குச்சாவடியின் கதவுகள் மூடப்பட்டன. அதிகமான கூட்டம் இருந்ததால் மக்கள் வாக்களிக்க முண்டியடித்தார்கள். இதனால் வாக்காளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி, வரிசையில் நிற்க வைத்தனர்.

காத்திருப்பவர்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு நேரத்தில் ஒளிரும் விளக்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஏகப்பட்ட பேருக்கு டோக்கன் விநியோகித்திருந்ததால் நீண்ட நேரம் வாக்குப்பதிவு தொடர்ந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் இரவு 9 மணி வரை வாக்களிக்கக் காத்திருந்தார்கள்.

இவர்களில் பெரும்பாலனவர்கள் கூலித்தொழிலாளர்கள் என்பதால் பணி முடிந்த பின்னர் வாக்களிக்க வந்திருப்பதாக குறிப்பிட்டார்கள். இறுதியாக ஒன்பதரை மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 9 மணி வரை தொடர்ந்து நடந்த வாக்குப்பதிவு என்கிற விஷயத்திலும் ஈரோடு கிழக்கு மக்கள் சாதனை செய்திருக்கிறார்கள் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். அடுத்த என்ன ரெக்கார்டோ?

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT