செய்திகள்

ஃபிப்ரவரி 10 – குடை நாள்! - எப்படிக் கொண்டாடலாம்?

லதானந்த்

‘Umbrella’  என்ற வார்த்தை, ‘Umbra’ என்ற லத்தீன் மொழியில் இருந்து பிறந்தது. இதற்கு, ‘நிழல்’ என்று அர்த்தம். வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும் குடைக்கு மரியாதை செய்யும் நாள் இது. வெயில் தாக்காமல் இருப்பதற்காகத்தான் குடைகள் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன. பின்னர்தான் மழைக் கவசம் ஆனது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குடைகள் புழக்கத்தில் இருந்தனவாம். எகிப்து, கிரேக்கம், சீனா, அஸ்ஸிரியா ஓவியங்களிலும், நுண்கலைகளிலும் குடைகள் இடம்பெற்றிருக்கின்றன.

மன்னர்களை வெயில் தாக்காதபடி பணியாளர்கள் குடைபிடிக்கும் காட்சிகளைப் பழங்கால எகிப்து மற்றும் ரோமானிய ஓவியங்களில் காணலாம். இப்போதும்கூட முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் முன்னணி நட்சத்திரங்களுக்கும், ‘குடைபிடிக்கிகள்’ இருப்பதைப் பார்க்கலாம்.

ஆரம்ப காலங்களில் குடைகளின் கைப்பிடிகள் திமிங்கலத்தின் எலும்பாலும், மேற்பரப்பு கேன்வாஸாலும் செய்யப்பட்டன.

16ஆம் நூற்றாண்டில் இருந்து மேற்கத்திய நாடுகளில் குடைகள் பிரபலம் ஆயின. ஆரம்ப காலத்தில், ‘இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்’ எனக் கருதப்பட்டது. ஜோஹாஸ் ஹான்வே என்ற பெர்ஷிய யாத்ரிக எழுத்தாளர் முப்பது ஆண்டுகள் இங்கிலாந்தில் குடையுடன் திரிந்துவந்தார். இன்றைக்கும் இங்கிலாந்துக்காரர்கள் தங்கள் குடைகளைச் செல்லமாக ‘ஹான்வே’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

மடக்கக்கூடிய குடைகளின் பயன்பாடு, சீனாவில் வெகு காலத்துக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்திருக்கிறது. குடைகளுக்கென்றே லண்டனில் தனியாக 1830ஆம் ஆண்டு, ‘ஜேம்ஸ் ஸ்மித்’ என்ற கடை தொடங்கப்பட்டது.

சரி… இந்தக் குடை நாளை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?

மழையிலும், வெயிலிலும் பயன்படுத்தியும், குடை கொண்டுவராதவர்களைத் தங்களது குடைக்குள் அரவணைத்தும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். சிலர் புதுக் குடைகளை வாங்குவதற்கு இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். குடைப் பிரியர்கள் குடைகளை மடக்கியும் விரித்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி மகிழ்கின்றனர்.

வாய் மணக்க இயற்கை வழிமுறைகள்!

உங்க குழந்தைக்கு அடிக்கடி இருமல் வருதா? ப்ளீஸ், சாதாரணமா எடுத்துக்காதீங்க! 

PAN-2.0; புதிய பான்கார்டு திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

மருத்துவர்களின் இன்றைய மிக பெரிய கவலை ஒலிமாசு! இதன் காரணமாக குறைபிரசவம்கூட ஏற்படுமாம்!

நீங்கள் நேர்மையானவரா? இல்லை நேர்மையானவராக நடிக்கிறீர்களா?

SCROLL FOR NEXT