செய்திகள்

மீனவர்கள் போராட்டம் - நேரில் சென்று ஆதரவு தெரிவித்த சீமான், திருமாவளவன்! நடந்தது என்ன?

ஜெ. ராம்கி

ஆக்ரமிப்புகளை அகற்றுமாறு கடந்த வாரம் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து, மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்ற பெஞ்ச் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. மீனவர்களின் போராட்டத்தினால் தினமும் சாலையை பயன்படுத்துபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலையில் இருந்த மீன் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

மீன் கடைகளை அகற்றியது மீனவ சமுதாய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவு வெளியானதும் மீனவர்கள் அதை ஏற்க மறுத்து போராட்டத்தில் இறங்கினார்கள். விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான மீன்கள், நண்டு உள்ளிட்டவற்றை சாலையில் கொட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான மீன்பிடி பகுதிகளை மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்களின் போராட்டத்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரித்து வந்தன.

நொச்சிக்குப்பம் - பட்டினப்பாக்கம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரம் நீளும் லூப் சாலை முழுவதும் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். கடற்கரையிலிருக்கும் படகுகளை சாலையில் மறித்து போட்டிருககிறார்கள். ஐஸ் பெட்டிகள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றை குறுக்கே வைத்தும் சாலை மறியல் நடத்தியிருக்கிறார்கள்.

மீன்பிடி படகில் கருப்புக் கொடியை பறக்கவிட்டிருக்கிறார்கள். அவ்வழியே எந்தவொரு வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு சாலை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. சாலையின் நடுவில் ஏராளமான பந்தல்கள் அமைத்து கூட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். திராவிடத் தலைவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு காட்டும் வேகத்தை மீன் சந்தை கட்டுவதற்கு யாரும் காட்டுவதில்லை மக்கள் இந்த இடத்தில் மீன் விற்பதால் யாருக்கும் எந்த இடையூறும் வந்ததில்லை. எனவே, உயர்நீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார். பத்திரிக்கையாளர்களிடம் பேசியவர், மீனவர்களின் உணர்வை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் எதுவும் அமைந்துவிடக்கூடாது. அதற்கேற்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றப்பட்ட அதே இடத்தில் அரசு சார்பில் கடைகள் கட்டி தரப்பவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையெடுத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

நேற்று மீனவர் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காணப்பட்டதால் தான் நேற்று வரை போக்குவரத்தை தடை செய்து வைத்திருந்தவர்கள், இன்று காலை முதல் நொச்சிக்குப்பம் சாலையில் போக்குவரத்தை அவர்களே முறைப்படுத்தி யிருக்கிறார்கள்.

முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் பிர்ச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்கிறார் மாநில சுகதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஒரு போராட்டமும் அதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தலைவர்களும் ஆதரவளித்திருக்கிறார்கள். இதுவே அபூர்வமான விஷயம்.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT