செய்திகள்

மோசடி புகாரில் தொடர்பு: ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கு முடக்கம்!

கல்கி டெஸ்க்

திரைப்பட நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான ஆர்.கே.சுரேஷுக்கும் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி இருக்கின்றனர். வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்துக்கு சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கிளை இருந்தது. இந்த மோசடி குறித்து ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்திருக்கும் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் இதுவரை 21 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதில் 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அதேபோல் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகரும், தயாரிப்பாளருமான பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேஷுக்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், படத் தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும் அவர் கூறி இருந்தார். மேலும் தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக தாம் வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் சுரேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அவருக்கும் ஆரூத்ரா நிறுவனத்தின் மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி, ’ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் என்ற விவரங்கள் இல்லை என்பதால் சம்மனை ரத்து செய்யப்போவதாகவும், வேண்டுமானால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும்படியும் காவல்துறையிடம் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் சந்தோஷ், சம்மனை ரத்து செய்ய வேண்டாம் எனவும், இந்த சம்மன் அனுப்பப்பட்டது குறித்து விளக்கம் தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து சம்மன் ரத்து செய்யப்பட்ட பின்பும் விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட நான்கு பேருக்கு போலீசார் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் போலீசாரை ஏமாற்றி வரும் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். ஆருத்ரா மோசடி புகாரில் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளதால் அவரின் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT