முன்பே அறிவித்தபடி நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. பால்வளத்துறை அமைச்ச ஆவடி நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசருடனான பேச்சு வார்த்தையில் எதிர்பார்த்த உடன்பாடு ஏற்படாததால் நாளை முதல் முன்னரே அறிவித்தபடி திட்டமிட்டு பால் விநியோக நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பாலுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. பால் கொள்முதல் விலை உயர்த்தாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பால் கொள்முதல் விலை நிலவரம் குறித்து தனியார் ஊடக செய்தி சேனலின் காலை நிகழ்ச்சி ஒன்றில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்திருந்தார்.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டலினுடன் அமைச்சர் நாசர் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் நாசர் உறுதியளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை முதல் பால் நிறுத்த போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
இதனால் ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.