செய்திகள்

இந்தியாவுக்கு புதிய பெயர்: ஜி20 மாநாடு அழைப்பிதழால் சர்ச்சை.. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!

க.இப்ராகிம்

ஜி-20 மாநாட்டிற்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிட்டு இருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த பிறகு இந்தியாவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை எழுப்பி அதற்கான ஆயத்த பணிகளை பாரதிய ஜனதா அரசு தற்போது தீவிரமாக முன்னெடுத்து இருக்கிறது. மேலும் இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில் கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவினுடைய பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு உரையாற்றியிருந்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா தனது ட்விட்டர் எக்ஸ் தலத்தில் இந்திய குடியரசு என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இந்த சர்ச்சைகள் தற்போது வரை தனியாத நிலையில் தற்போது ஜி 20 மாநாட்டிற்காக தயாராகி வரும் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வரும் உலகத் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் சார்பாக ராஷ்டிரபதி பவனில் இரவு விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரவு விருந்திற்கு உலகத் தலைவர்களை அழைக்கும் விதமாக அச்சிடப்பட்டிருக்கக்கூடிய அழைப்புகளில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது நாடு முழுவதும் மிகப் பெரிய சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்த பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.

இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT