காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் ஹரியானா மாநிலம் சோன்பட்டைச் சேர்ந்த பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். பொது மக்களை நேரில் சந்தித்து உரையாடிவரும் அவர் அதை விடியோவாக பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் தாய் சோனியாகாந்தி மூவரும் பெண் விவசாயிகளிடம் சுதந்திரமாக உரையாடி, டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.
பெண் விவசாயிகளிடம் சாதாரணமான முறையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு பெண், “ராகுல்காந்திக்கு திருமணம் செய்து வையுங்கள்” என்று சோனியாவிடம் கூறினார். அதற்கு சோனியா, “நீங்களே ஒரு நல்ல பெண்ணை தேர்ந்தெடுங்களேன்” என்று நகைச்சுவையாக பதில் கூறினார். இந்த விடியோவை ராகுல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
உணவு, பெண்களுக்கு அதிகாரம், ஜி.எஸ்.டி. ஆகியவை அவர்கள் உரையாடலின் முக்கிய அம்சமாக இருந்தது. பெண் விவசாயிகளிடம் ராகுல், தில்லியில் உள்ள பிரியங்கா காந்தியின் வீட்டுக்கு ஒருநாள் விருந்துக்கு வருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். தமது வீட்டை அரசு எடுத்துக் கொண்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நாள் மறக்க முடியாதது. சோன்பேட்டைச் சேர்ந்த பெண் விவசாயிகள் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தனர். நான், தாய் சோனியா, சகோதரி பிரியங்கா மூவரும் அவர்களை வரவேற்றோம். இந்த விருந்தில் வேடிக்கையும் இருந்தது. அவர்ளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டோம். பசு நெய், ஸ்வீட் லஸ்ஸி, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் இவற்றுடன் அன்பும் இருந்தது என்று ராகுல் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். கடந்த ஜூலை 16 ஆம் தேதி பெண் விவசாயிகள் வீட்டிற்கு வந்திருந்ததாக ராகுல் குறிப்பிட்டார். ஆனால், விடியோ இன்றுதான் வெளியானது.
தில்லிக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்ட பெண் விவசாயிகள், உரையாடலின்போது பணவீக்கம், விலைவாசி உயர்வு, மருந்து, உரங்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. குறித்தும் பேசியதாக ராகுல் கூறினார்.
பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால், சமூகம் அவர்களை ஒடுக்கி வைத்திருக்கிறது. பெண்கள் எந்தவித பயமும் இல்லாமல் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும் என்று ராகுல் கூறினார்.
இந்த உரையாடலின்போது ராகுல்காந்தி செய்த தவறுகளுக்காக தாம் திட்டுவாங்கியதாக பிரியங்கா காந்தி பேசுகையில் நினைவுகூர்ந்தார். பெண் விவசாயிகளுடன் பிரியங்கா நடனமாடும் விடியோவும் வெளியாகியுள்ளது.
முன்னர் அளித்த ஒரு பேட்டியில் ராகுல்காந்தி, “எனக்கு பிடித்தமான, புத்திசாலியான பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன்” என்று கூறியிருந்தார். . மற்றொரு பேட்டியில் எனது தாயைப் போன்ற அன்பும், பாட்டியைப் போன்ற தைரியமும் புத்திசாலித்தனமும் உள்ள பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.