செய்திகள்

வெளிநாட்டு பாணியில் தமிழகத்தில் கண்ணாடி பாலம்!

கல்கி டெஸ்க்

ன்னியாகுமரி மாவட்டம், குமரிக் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் பிரம்மாண்டமான 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதைக் கண்டு ரசிக்க இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர்.

கடலின் நடுவே அமைந்த விவேகானந்தர் நினைவிடத்திலிருந்து அய்யன் திருவள்ளுவர் சிலையை காணச் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆழமான கடலைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் படகுகளையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். மேலும், விவேகானந்தர் நினைவு மண்டபப் பகுதியில் கடலின் ஆழம் அதிகமாக உள்ளது. அதேசமயம் திருவள்ளுவர் சிலை அமைந்த படகு தளத்தில் ஆழம் குறைவாக உள்ளதாலும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகள் இருப்பதாலும் கடலின் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

இதனால் இதுபோன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகள் திருவள்ளூர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. ஆகவே, விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூர் சிலை இடையே பாலம் ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்திலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல வெளிநாட்டு பாணியில் ஒரு கண்ணாடிப் பாலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மிகவும் நவீன பாணியில் அமையவிருக்கும் இந்த கண்ணாடி கூண்டு பாலத்தின் திட்ட மதிப்பீடு 37 கோடி ரூபாய் ஆகும். இந்தப் பாலத்தினை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளைத் துவங்கியிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்துள்ளது. 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படும் இந்தப் பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தங்கள் பாதங்களின் கீழே கடல் அலையை கண்டு ரசிக்கும் வண்ணம், வெளிநாடுகளில் அமைந்துள்ளது போல் இந்தக் கண்ணாடி கூண்டு பாலமும் அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகு விரைவில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும், இப்பணி ஒரு வருட காலத்துக்குள் நிறைவடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

SCROLL FOR NEXT