பாரத் ஆட்டா என்ற பெயரில் கோதுமை மாவு பாக்கெட்டை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
உணவுப் பொருட்கள் விலையேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாரத் என்ற பிராண்டின் கீழ் ஒரு கிலோ கோதுமை மாவு 27 ரூபாய் 50 காசுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 நடமாடும் வாகனங்களில் பாரத் ஆட்டா விற்பனையை மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், பாரத் ஆட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், உணவுப் பொருளின் விலை குறையும் என்றார். மேலும், கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் ஆகியவற்றின் அனைத்து கடைகளிலும் பாரத் ஆட்டா கிடைக்கும் என்றும், விரைவில் பிற கூட்டுறவு, சில்லறை விற்பனை கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது என்றார். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசு கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் மூலம் ஒரு கிலோ பாரத் பருப்பை ரூ.60 க்கு வழங்குகிறது என்றும் கூறினார்.
இந்த முயற்சிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு பெரும் பயனளித்துள்ளன என்றும் விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து, அதன் பின்னர், நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் உதவ வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார் என்றும் கூறினார்.