தமிழக அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இரண்டு நாள் கருத்தரங்கம் உதகை ராஜ்பவனில் இன்று காலை தொடங்கியது. இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கருத்தரங்கின் தொடக்கத்தில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு தொடங்கப்பட்ட கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகலாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்" என்று பேசி இருக்கிறார்.
தமிழக அரசின் நிர்வாக விஷயங்களில் ஆளுநர் ஆர்.என்.ரசி அடிக்கடி தலையிட்டு வருவதாக சமீப காலங்களில் ஆளும் திமுக அரசுகுற்றம் சாட்டி வருகிறது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், வரும் 2024ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒன்பது நாட்கள் பயணமாகச் சென்று இருந்தார். அதைத் தொடர்ந்து அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், வர்த்தக அமைப்பினர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில், தமிழக ஆளுநர் முதல்வர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.