ஆளுநர் ஆர்.என்.ரவி 
செய்திகள்

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் அடுத்த மூவ்...!

கல்கி டெஸ்க்

செந்தில் பாலாஜி விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியபடி கவர்னர் ஆர்.என்.ரவி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்து கேட்க முயற்சி மேற்கொண்டுள்ளார் என்கிற தகவல்கள் வந்துள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிரந்தரமாக வாபஸ் பெறுவாரா? இல்லையா? என்பது பின்னர் தெரியவரும்.

நேற்று முன்தினம் அரசியல் சாசனத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுவதாக ஆளுநர் ரவி குறிப்பிட்டிருந்தார். இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து சட்ட ரீதியாக சந்திக்க போவதாகவும் தெரிவித்தார்.

கவர்னரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பு சட்ட நிபுணர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரை தன்னிச்சையாக நீக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்று சுட்டிக்காட்டினார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த விசயம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தெரியவந்தது. அவர் தலைமை வழக்கறிஞர் கருத்தை கேட்டு முடிவெடுங்கள் என்று கவர்னருக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை அன்றிரவே நிறுத்தி வைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார்.

அதில் தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்கும் வரை உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று 6 பக்க கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அதில் எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்றும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி தான் நீங்கள் செயல்பட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். அரசியல் சாசனம் 164(1) பிரிவின்படி ஒரு அமைச்சரை நியமிக்கவோ, அல்லது நீக்கவோ முதலமைச்சரின் ஆலோசனைப் படிதான் கவர்னர் செயல்பட முடியும்.

செந்தில் பாலாஜி

அரசியல் சாசனம் 164(2)-ன்படி முதலமைச்சரும், அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே நீங்கள் எனது ஆலோசனை இல்லாமல் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்தது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டிருந்தார்.

அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தற்போது விடுமுறையில் சென்றுள்ளதால் வருகிற திங்கட்கிழமைதான் டெல்லி வருவார் என்று தெரிகிறது. இதனால் தான் எடுத்த நடவடிக்கை குறித்தும் அதற்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ள சட்ட பிரிவைகளை சுட்டிக் காட்டியும் அட்டர்னி ஜெனரலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான கடிதம் தயாரித்து அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தின் மீது வருகிற திங்கட்கிழமை அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT