செய்திகள்

நெஞ்சால் நீந்தி கடலைக் கடந்து உலக சாதனை நிகழ்த்திய மாற்றுத்திறன் கொண்டவர்...

சேலம் சுபா

ரு மனிதன் மகிழ்வுடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் பெற்றிருந்தாலும் மனதில் நிறைவுடன் வாழ்பவர்கள் வெகு சிலரே. அதிலிருந்து விதிவிலக்காக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகின்றனர். அப்படியொருவர்தான் சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீராம்.

     பிறக்கும்போதே கை, கால்கள் செயல்படாத நிலையில் மனவளர்ச்சி குன்றியவராக செரிபரல் பால்சி எனும் நோயால் பாதிக்கப்பட்டவர். தற்போது 29 இளைஞராக உள்ள இவருக்கு நான்கு வயது முதலே நீச்சல் பயிற்சிகளை அளித்ததன் மூலம் இன்று உலகம் முழுவதும் அவரை வியந்து பாராட்டும் அளவுக்கு கொண்டு வந்துள்ளனர் அவரின் பெற்றோர். 

     ஆம்.  ஸ்ரீராம் தனது சாதனை முயற்சியாக கடந்த 12ம் தேதி மாலை 5 மணிக்கு இலங்கை தலைமன்னார் கடலில் இறங்கி 13 ம் தேதி மதியம் ஒரு மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைந்தார். வெற்றிகரமாக சாதனையை முடித்து தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையான பாக் ஜலசந்தி கடலை “ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் நீந்திக் கடந்து உலக சாதனை நிகழ்த்திய முதல் மாற்றுத்திறன் கொண்டவர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய மாணவர் படை நடத்திய கடலூர் பாண்டிச்சேரி கடலில் 5 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்காக மத்திய அரசின் சமூக நீதித்துறை  மாற்றுத் திறனாளிகளுக்கான ரோல்மாடல் என்ற விருதை வழங்கி கவுரவித்தது.

     இதையடுத்து கடந்த 2022 ம் ஆண்டில் அதே கடலூர் பாண்டிச்சேரி கடலில் 10 கிலோமீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்தார். அப்போதைய முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலரின் பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றார். இதுவரை இவர் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து 40 க்கும் மேற்பட்ட மெடல்களைப்பெற்றுள்ளார்.

தற்போதைய இந்த உலக சாதனை அவரின் புகழை மேலும் உயர்த்தியதோடு அவரைப் போன்ற மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கும் புத்துணர்வைத் தந்து நம்மாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையத் தந்துள்ளது.

      மகனின் குறைப்பாட்டை நினைத்து மனம் துவளாமல் அவருக்கு விடாமல் பயிற்சிகள் தந்து சாதிக்க வைத்த அவரின் பெற்றோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT