செய்திகள்

கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்!

கார்த்திகா வாசுதேவன்

கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக காத்திருந்த மனைவி மீது ஆண் ஒருவர் வியாழக்கிழமை ஆசிட் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்த கவிதா (33) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு பஸ் பயணியிடம் செயின் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் விசாரணைக்காக கோர்ட்டுக்கு வருவது வழக்கம்.

கவிதா தனது இரண்டு குழந்தைகளையும் கணவர் சிவாவையும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது, அவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வியாழனன்று, கவிதா ஜூடிசியல் மாஜிஸ்திரேட் II ஐ ஒரு வழக்கு விசாரணைக்காக சந்தித்தார், அப்போது அவரைப் பின்தொடர்ந்த சிவா, கவிதா நீதிமன்ற நடைபாதையில் காத்திருந்தபோது அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றி, சிவா தான் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து கவிதா மீது ஆசிட் ஊற்றினார்.

இதில் கவிதா பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது.

அங்கிருந்த வழக்கறிஞர்கள் தாக்குதலை தடுக்க முயன்றும் பலனில்லை. ஆசிட் கொட்டியதில் வழக்கறிஞர் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனையொட்டி சிவாவை அங்கிருந்த வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

கவிதாவை உடனடியாக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 13 அன்று, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நபர் ஒருவர் மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அத்துடன் இப்போது மற்றுமொரு குற்றமாக கவிதா மீது ஆசிட் ஊற்றிய சம்பவமும் நீதிமன்றத்திற்குள் நடந்துள்ளது. மக்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு நீதி கேட்டுச் செல்லும் இடமான நீதிமன்ற வளாகத்தில் இப்படியான குற்றச் சம்பவங்கள் அரங்கேறுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.

கோடைக்காலத்தில் வியர்க்குரு வராமல் தடுப்பது எப்படி?

சுற்றுச்சூழலை பராமரிக்கும் சதுப்பு நிலங்கள்! 

மனச்சோர்வு இருப்பதைக் கண்டறியும் வழிகள்!

Birthday Special: ரவீந்திரநாத் தாகூரின் 16 பொன்மொழிகள்!

மண்ணின் வளத்தை மேம்படுத்த உதவும் பசுந்தாள் உரப் பயிர்கள்!

SCROLL FOR NEXT