செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி, இருக்குமிடம் தெரிந்தால் நேரில் போய் சந்திப்பேன் - கே.எஸ்.அழகிரி அதிரடி

ஜெ. ராம்கி

தமிழ்நாட்டில் தீண்டாமை அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர்.என் ரவி தவறாக குறிப்பிடுகிறார். அவரது பேச்சில் எந்த உண்மையும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார்.

நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அழகிரியிடம், ஆளுநரின் சமீபத்திய பேச்சு பற்றி நிருபர்கள் கருத்து கேட்டார்கள். தலித் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகின்றன. அதில் ஈடுபடுபவர்களில் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது. தலித் மக்கள் வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 30 சதவீதம் பயன்படுத்தப்படுவதில்லை என்றெல்லாம் ஆளுநர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசியிருப்பதாக அழகிரி குறிப்பிட்டார்.

தனது அதிகார வரம்பை மீறி அரசியல் பேசி வரும் ஆளுநர், எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துரிதமாக்கவும், ரயில்வே திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது பற்றியும் ஏன் பேச முடியவில்லை? தமிழ்நாட்டில் தீண்டாமையும், சாதியக்கொடுமைகளும் அதிகரித்து வருவதாக அபாண்டமாக பேசியிருக்கிறார். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இந்தியா முழுவதும் தீண்டாமை இருக்கிறது. அதை யாரும் மறுக்கமுடியாது. நாங்களும் மறுப்பதற்கில்லை. தலித் மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை யார் முன்னெடுத்தது என்பதை பார்க்க வேண்டும்.

மதுரையில் ஆலயப் பிரவேசத்தை முன்னெடுத்தது காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த வைத்தியநாத ஐயர். தமிழ்நாட்டில் தீண்டாமையை நீக்குவதற்கு தந்தை பெரியாரும் காமராஜரும் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில்தான் உள்துறை அமைச்சராக ஒரு ஆதி திராவிடர் நியமிக்கப்பட்டார். இந்து சமய அறநிலையத்துறைக்கு தலித்தை அமைச்சராக்கியதும் காங்கிரஸ் அரசுதான்.

தமிழ்நாட்டில் யாரெல்லாம் முதல்வராக வந்தார்களோ அவர்களெல்லாம் சமூக நீதியை உறுதி செய்திருக்கிறார்கள். பா.ஜ.க தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் தலைமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

அதானி குழுமம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பி வரும் கேள்விகளுக்கு பிரதமரும் அவரது அமைச்சரவையினரும் பதில் சொல்லியாக வேண்டும் என்ற கே.எஸ். அழகிரி, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்தும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த அழகிரி, பிரபாகரன் உயிரோடிருந்தால் மகிழ்ச்சிதான். பிரபாகரன் எங்கிருக்கிறார் என்று நெடுமாறன் அடையாளம் காட்டினால் அங்கே சென்று அவரை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள், பிரபாகரன் என்றாலே முன்னர் கொதித்தெழுந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தற்போது மாற்றம் தெரிகிறது. அறிவாலயத்துடனான கூட்டணி கோயிங் ஸ்டெடி என்பதால் வந்த மாற்றம் இது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT