மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. தகுதியுடைய மகளிருக்கே ரூ.1000 என மடைமாற்றாமல், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று அறிவித்தார். 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
இந்த பட்ஜெட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்றான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அண்ணா பிறந்த் நாளான செப்டம்பர் 15 முதல் என அறிவிக்கப்பட்டுள்ளது'.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்ஜெட் குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்கு பிறகு, மகளிருக்க மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி, செப்டம்பர் மாதம் வழங்கப்படும் முதல் தவணையில் 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000 வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். தகுதியுடைய மகளிருக்கே ரூ.1000 வழங்கப்படும் என மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் பட்ஜெட் சிறப்பம்சங்களான பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் அமைத்தல், முதலமைச்சரின் முக்கிய திட்டமான காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்தல், சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் அமைத்தல் , மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் உதவி வழங்குதல் , பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு திட்டம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.