தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இன்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தான் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும், தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என்றும் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக இன்று பதவியேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயநிதிக்கு அனைத்து கட்சி தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம் அதன்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டேன். மாரி செல்வராஜ் தயாரிக்கும் மாமன்னன் படம்தான் ஒரு நடிகராக எனது கடைசி திரைப்படமாக இருக்கும்.
-இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.