செய்திகள்

‘பாசாங்குத்தனத்துக்கு விருது கொடுத்தால் அதை ஸ்டாலின் வெல்வார்’ அண்ணாமலை சாடல்!

கல்கி டெஸ்க்

நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டத்தில் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘உள்ளூர் மொழிகளுக்கு இந்தி போட்டியாக இருக்காது. இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், அதை இறுதியில் எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்’ என்று பேசி இருந்தார்.

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு, மற்ற மொழி பேசும் மக்களை இந்திக்குக் கொத்தடிமையாக்கும் ஏதேச்சதிகார முயற்சி ஆகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு ஒன்றும் தலையாட்டி பொம்மை அல்ல. 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மறுபடியும் உருவாக்காதீர்கள்'' என எச்சரிக்கை பதில் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதுகுறித்த பதிவொன்றை தமது ட்விட்டர் (X) பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், ‘2011ல் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியை அமல்படுத்த 170 பரிந்துரைகளை முன்வைத்தபோது, ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்? ஒருவேளை உங்களின் கூட்டணியே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை கொண்டு ரெய்டு நடத்தியது உங்களை மோசமாகப் பாதித்ததால் மௌன விரதம் இருந்தீர்களா? ஸ்டாலின் எதற்காக இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மட்டும் குறிப்பிடுகிறார். அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே நாடு அதிகாரம் பெறும் என்றுதான் அமித் ஷா கூறி இருக்கிறார். எனவே, தமிழ்நாட்டுக்குள் தமிழ் தனித்து நிற்கிறது என்பதை உறுதிப்படுத்தியவர்கள், இது 1965 அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கோபாலபுரம் குடும்பம் நடத்தும் பள்ளிகள் உட்பட, சிபிஎஸ்இ பள்ளிகளில் முதன்முறையாக பிராந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இரட்டை நிலைப்பாடு, பாசாங்குத்தனம் போன்றவற்றுக்கு விருது வழங்கப்பட்டால் ஸ்டாலின் அதை வெல்வார்" என்று அந்தப் பதிவில் கடுமையாக சாடி இருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT