லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காகக் கல்லூரி மாணவ மாணவிகள் பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர். இதனையடுத்து தற்போது இதற்கான காரணம் என்னவென்ற செய்திகள் வெளியாகிவுள்ளன.
கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. கேரளாவில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதாவது இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஆகியவை போட்டியிடப் போகின்றன. இந்தக் கட்சிகளில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்த வண்ணம் உள்ளனர். அதேசமயத்தில் வேட்புமனு தாக்கலும் செய்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் தற்போதைய மத்திய அமைச்சர் முரளிதரன் போட்டியிடுகிறார்.
முரளிதரன் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார். இவர் ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் அட்டிங்கால் தொகுதியில் போட்டியிடவுள்ளார். தற்போது இந்தத் தொகுதியில் காங்கிரஸ் எம்பியாக அடூர் பிரகாஷ் உள்ளார். இவர்தான் மீண்டும் இந்தத் தொகுதியில் முரளிதரனை எதிர்த்து நிற்கிறார்.
இந்தநிலையில்தான் இன்று வேட்புமனு தாக்கல் செய்த முரளிதரனுக்கு கல்லூரி மாணவ மாணவிகள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பணத்தைக் கொடுத்துள்ளனர்.
இதற்கு காரணம் அந்த கேரளா மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தவர்கள் ஆவார்கள். ஆனால் உக்ரைன் நாட்டில் போர் எழுந்ததிலிருந்து அவர்களின் உயிர் கேள்விக்குறியில் இருந்தது. அந்தநிலையில்தான் கேரளா அரசு உக்ரைன் நாட்டிலிருந்த கேரளா மாணவ மாணவிகளை பத்திரமாக கேரளாவிற்கே திரும்ப அழைத்து வந்தது. அதில் முக்கிய பங்காற்றியவர்தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன்.
தங்கள் பிள்ளைகள் பத்திரமாக நாடு திரும்ப உதவிய முரளிதரனுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய எண்ணிதான் இந்த உதவியை அவர்கள் செய்துள்ளனர். மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இணைந்து பணம் சேகரித்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ரூபாய் 25 ஆயிரத்தை முரளிதரனிடம் நேரில் வழங்கினர். இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.