பாகிஸ்தான் விமானப்படையின் பாஸிங் அவுட் அணிவகுப்பில் கலந்துக்கொண்ட ராணுவ தலைமைத் தளபதி சையத் அசிம் முனீர், “இந்தியா எங்களின் பரம எதிரி” என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக காஷ்மீர் பிரச்சனை என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அந்தவகையில், கபர் பக்துங்க்வா மாகாணத்தின் ரிசல்பூரில் உள்ள அஸ்கர்கான் அகடாமியில் பாகிஸ்தான் விமானப்படையின் பாஸிங் அவுட் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ராணுவ தலைமைத் தளபதி சையத் அசிம் முனீர் கலந்துக் கொண்டார். அப்போது அவர் இந்தியாவைத் தாக்கி பேசியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான சூழலைப் பற்றி பேசிய அவர், “தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இந்தியாதான் நம்முடைய பரம எதிரி.” என்று பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்திய சம்பவத்தையும் குறிப்பிட்டு பாராட்டினார். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியதோடு சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
தற்போது இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதியின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவில் உள்ள சிக்கலை மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது, அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் ஐசிசி சாம்பியன் தொடரை பாகிஸ்தான் எடுத்து நடத்துவதால், இந்திய அணியை அங்கு அனுப்பலாமா? வேண்டாமா? என்ற முடிவே இன்னும் எடுக்கப்படவில்லை.
அந்த முடிவை எடுக்கும் முக்கிய பொறுப்பு பிசிசிஐ விட இந்திய அரசாங்கத்திற்கே உள்ளது. இந்தநிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி இவ்வாறு பேசியது பிசிசிஐ யோசிக்க வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் பொறுத்தவரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிந்த அளவு இந்திய வீரர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டே முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.