செய்திகள்

நாகை - காங்கேசன்துறை இடையே படகுப் போக்குவரத்து உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்களில் இந்தியா, இலங்கை கையெழுத்து!

கல்கி டெஸ்க்

லங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே 2022ம் ஆண்டு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தரும் அரசுமுறைப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்தியாவுக்கு வருகை தந்த ரணில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசி உள்ளார்.

இந்த இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் இந்தியா – இலங்கை இடையே நான்கு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இந்த நான்கு ஒப்பந்தங்களில் ஒன்றாக UPI பரிவர்த்தனையை இலங்கையில் அனுமதிக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் நாகை -  காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்தைத் தொடங்கவும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதைப்போலவே, மேலும் இரண்டு முக்கியமான ஒப்பந்தங்களும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ரணில் முன்னிலையில் கையெழுத்தாகி இருக்கின்றன. இந்த இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது, இலங்கை தமிழர்கள் நலன் மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வருகை தரவிருக்கும் இலங்கை அதிபரிடம், ‘இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் வலியுறுத்திட வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT