செய்திகள்

பாகிஸ்தான் வழியாக மெக்காவுக்கு இந்தியர் ஹஜ் யாத்திரையாக நடைபயணம்!

ஜெ.ராகவன்

செளதி அரேபியாவில் மெக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

இந்த நிலையில் கேரளத்தைச் சேர்ந்த ஷிஹாப் என்ற 29 வயது இளைஞர் நடைபயணமாக செளதி அரேபியா சென்று ஹஜ் யாத்திரையில் பங்கேற்க முடிவு செய்தார்.

இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது 3,000 கி.மீ. ஹஜ் யாத்திரை நடை பயணத்தை கேரளத்தில் தொடங்கினார். வாகா எல்லையை அடைந்த அவரை பாகிஸ்தான் குடியேற்றத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

“நான் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவை கடந்து வந்துவிட்டேன். ஹஜ் யாத்திரை செல்ல என்னை மனிதாபிமான முறையில் அனுமதிக்க வேண்டும்” என்று ஷிஹாப் கோரினார். ஆனால், அதிகாரிகளோ பாகிஸ்தான், ஈரான் வழியாகச் செல்ல வேண்டுமானால் போக்குவரத்து விசா இல்லைாமல் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இந்த நிலையில் லாகூரைச் சேர்ந்த சர்வார் தாஜ் என்பவர், ஷிஹாப் சார்பில் லாகூர் உயர்நீதிமன்றத்தில் செளதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்குச் செல்ல போக்குவரத்து விசா கேட்டு மனு தாக்கல் செய்தார்.

பாகிஸ்தானில் நடைபெறும் குருநானக் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவில் உள்ள சீக்கியர்களுக்கு புனிதயாத்திரை விசா வழங்குவதுபோல ஷிஹாபுக்கும் போக்குவரத்து விசா வழங்குமாறு வாதிட்டார்.

லாகூர் உயர்நீதிமன்றம் மனுதாரர் இந்திய குடியுரிமை பெற்றவருக்கு எந்தவிதத்திலும் தொடர்புடையவர் அல்ல. மேலும் ஷிஹாப் சார்பாக மனு தாக்கல் செய்ய அவருக்கு

அதிகாரம் ஏதும் அளிக்கப்படவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தாஜ், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானில் உள்ள பகத் சிங் நினைவு அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேஷியும் அவருக்கு ஆதரவாக வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஷிஹாப் ஹஜ் பயணத்தைத் தொடர போக்குவரத்து விசா அளிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து வாகா எல்லையைத் தாண்டி லாகூர் வந்த ஷிஹாப்பை தாஜ் மற்றும் குரேஷி இருவரும் வரவேற்றனர். மெக்காவுக்கு பயணத்தை தொடர அனுமதி கிடைத்தது குறித்து ஷிஹாப் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அன்பு, நட்புறவை வலியுறுத்தி மெக்காவுக்கு நடைபயணம் மேற்கொண்ட ஷிஹாபுக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டோம். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அது முடியாமல் போய்விட்டது என்று குரேஷி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT