தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார். தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் கொண்டாடும் இரண்டாவது பிறந்த நாள் இதுவாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னையில் கூடி உள்ளனர். இப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விமான நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முன்னதாக சென்னைக்கு வருகை தந்த சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். சென்னைக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக அமைச்சர்கள் நாசர், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜோதிமணி, எம்.எல்.ஏ. விஜயதாரணி, முன்னாள் எம்.பி. தங்கபாலு உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி கட்டமைப்பை வலுவாக்கும் மற்றும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் கூட்டமாக இது அமையும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.