Akhilesh Yadav & Mamata Banerjee 
செய்திகள்

இந்திய எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம்: மம்தாவைத் தொடர்ந்து அகிலேஷும் பின்வாங்கினார்!

ஜெ.ராகவன்

நாளை (டிச.6) தில்லியில் நடைபெற இருக்கும் இந்திய எதிர்க்கட்சிக் கூட்டணி கூட்டத்தில் தங்கள் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க மாட்டார் என்று சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளதுரி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை கூறியிருந்த நிலையில் அகிலேஷின் இந்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை வகுக்கும் நோக்கில் இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

டிசம்பர் 6 ஆம் தேதி கூட்டம் குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. அன்றைய தினம் நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நான் வேறு நிகழ்ச்சிகளை ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன் நிச்சயம் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று மம்தா கூறியுள்ளார்.

இதனிடையே சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவு எம்.பி.யான சஞ்சய் ரெளத் கூறுகையில், எதிர்க்கட்சி கூட்டணிக் கூட்டம் ஒன்றும் அவசரம் அவசரமாக கூட்டப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே டிசம்பர் 6 இல் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. கூட்டம் நடைபெறுவது குறித்து 2 நாட்களுக்கு முன்னரே மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் தாக்கரேயுடன் பேசினார். தில்லியில் நடைபெறும் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வார் என்றார் அவர். 

இதனிடையே பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த உறுப்பினருமான நிதிஷ்குமாரும் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக அக்கட்சியின் தலைவர் ராஜீவ் ரஞ்சன் பற்கேற்பார் என்றும் பிகார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் விஜயகுமார் செளதுரி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிக் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியை அள்ளிச் சென்றுள்ள நிலையில் இந்த கூட்டம் இப்போது அவசியமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை. எனவே எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மாநில அளவில் என்னென்ன தொகுதிகள் என்பதை முதலில் பேசி தீர்க்கட்டும். அதன்பிறகு தேர்தல் உத்திகளை வகுக்கலாம். அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் பா.ஜ.க.வை வெல்வது ஒன்றும் முடியாத காரியமில்லை என்றார் அவர்.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT