நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து வகை ரயில்களிலும் ஏசி கோச்சிக்கான ரயில் கட்டணத்தில் 25 சதவீதம் வரை குறைத்து ரயில்வே வாரியம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த வாரம் ரயில்வே அமைச்சகம், ரயில்வே வாரியம் மற்றும் மண்டல அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து வகை ரயில்களிலும் ஏசி சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டி வகுப்பு வகுப்புகளுக்கான ரயில் கட்டணத்தை 25 சதவீதம் வரை குறைத்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
மேலும் எந்தெந்த ரயில்களுக்கு எத்தனை சதவீதம் கட்டணம் குறைக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயன்படுத்திய ரயில்களின் வகுப்புகளுக்கும் 25 சதவீதம் வரை கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும். மேலும் முக்கிய நகரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில் கட்டணத்திற்கான கட்டணங்களை குறைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் முன்பதிவு கட்டணம், ஜிஎஸ்டி, அதிவிரைவு கட்டணம் ஆகியவை தனியாக வசூலிக்கப்படும் என்றும், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கட்டணச் சலுகை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை அடுத்த ஓராண்டிற்கு அமலில் இருக்கும் என்று ரயில்வே வாரியம் குறிப்பிட்டுள்ளது.