காலிஸ்தான் அமைப்பின் பரிவினைவாதி ஹர்தீப் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் மூன்று இந்தியர்களை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால், மீண்டும் காலிஸ்தான் பிரச்சனை தற்போது தலைத்தூக்க ஆரம்பித்திருக்கிறது.
சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்துடன் காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் இந்த இயக்கம் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட போதிலும், வெளி நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் தொடர்ச்சியாக காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில், கனடாவில் சீக்கிய மத நிறுவன நாள் கொண்டாட்டத்தின்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சீக்கிய மக்கள், அந்த நாட்டு பிரதமர் ட்ரூடோ முன்னிலையில் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற கோஷம் எழுப்பியதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, கனடா, இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது மற்றொரு சர்ச்சையும் கிளம்பியுள்ளது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக பேசினார். இது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. இந்தியா இதற்கு முழு மூச்சாக மறுப்புத் தெரிவித்து வந்தது. இதற்கிடையே தற்போது ஹர்தீப் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங், (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மூவரும், ஆல்பர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் non-permanent residents என்று விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார். இந்த மூவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்று அவர்கள் விசாரணையின்போது கூறியிருக்கின்றனர். இந்திய அரசுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதுபற்றி விசாரணை நடந்து வருகின்றது.
இதுத்தொடர்பாக போலீஸ் உதவி ஆணையர் டேவிட் டெபூல் கூறியதாவது, “விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. கைது செய்த உடன் நிலைமை முடிவுக்கு வந்ததாக அர்த்தம் இல்லை. கைது செய்யப்பட்டோருக்கு இந்திய அரசுடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்." என்றார்.