Indeed என்ற வேலைவாய்ப்பு தளம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 70 சதவீத இந்தியர்கள் வேலையில் சுகமாக இருப்பதையே எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
பெரும்பாலான வேலைகளில் சுகமாக இருப்பதையே இந்தியர்கள் எதிர்பார்ப்பதாக சமீபத்திய ஆய்வு மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியர்களாகிய நாம் வேலை என்றாலே வெளியூர், வெளிநாடு என சென்று வந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு நமக்கு அதில் சலுகையும் கிடைத்துள்ளது. அதாவது கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை உலக நாடுகளில் நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவிலும் புது விதமான பணிச்சூழலை ஏற்படுத்தியது.
இந்த வொர்க் பிரம் ஹோம் என்ற வேலைமுறை வந்த பிறகு பணியாட்களின் ப்ரொடக்ஷன் அளவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் வொர்க் ப்ரம் ஹோம் வேலைமுறை ஊழியர்களுக்கு சுகத்தைக் கொடுத்துவிட்டால், அவர்கள் வேலைக்கு முக்கியத்துவம் தருவதற்கு பதில், சுகத்திற்கு முக்கியத்துவம் தருவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதற்கான ஆய்வை Indeed என்ற வேலைவாய்ப்பு வழங்கும் தளம் சுமார் 1200 வேலை தேடும் நபர்களிடம் மேற்கொண்டதில், அதில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் வொர்க் ஃப்ரம் ஹோம் அல்லது இருக்கும் இடத்திலிருந்தே வேலைசெய்யும் ஆப்ஷனைத் தேர்வு செய்வதாகத் தெரிந்துள்ளது. 67% பேர் வேலையில் என்ன ஊதியம், விடுமுறைகள், காப்பீடு இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆனால் இத்தகைய விஷயங்களுக்கு முன்னிலை அளிப்பவர்களுக்கு நிறுவனங்கள் வேலை தருவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 6.5 சதவீத நிறுவனங்கள் தான் ரிமோட் அல்லது ஒர்க் ப்ரம் ஹோம் வேலையை வழங்குவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
கொரோனாவின் காரணமாகவே இந்த மாற்றம் என்றாலும், வெகுதூரம் வேலைக்குச் சென்று பணிபுரிய சமீப காலமாக யாரும் விரும்புவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பெரும்பாலான இந்தியர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நல்ல ஊதியம், புகழ், ஜாப்ஸ் செக்யூரிட்டி போன்றவை சிறப்பாக இருந்தாலும், பணிக்கு சென்று வர அலுப்பாக இருந்தால் ராஜினாமா செய்துவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.