இந்தியாவில் இணைய பொருளாதாரம் 2022 இல் 175 பில்லியன் டாலர்களில் இருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலராக உயரும் என்று கூகுள், டெமாசெக் மற்றும் பெயின் & கம்பெனியின் கூட்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்களின் கணக்கெடுப்பு களின் அடிப்படையில், டிஜிட்டல் நுகர்வானது முக்கிய இணையப் பொருளாதாரத் துறைகளான இ-காமர்ஸ், உணவு விநியோகம் போன்றவற்றில் வளர்ச்சியை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 2030ல் இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் இணையப் பொருளாதாரத்தின் பங்களிப்பு 2022ல் 48 சதவீதத்திலிருந்து, 62 சதவீதமாக வளரும். இது தற்போது இருக்கும் 4-5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து, 12-13 சதவீதமாக உயரும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல பெரு நகரங்களில் டிஜிட்டல் தேவை அதிகரித்து வருவதால், பாரம்பரிய வணிகங்களின் டிஜிட்டல் மயமாக்கலானது இணைய பொருளாதாரத்தின் எழுச்சிக்கு காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் இணையப் பொருளாதாரம் ஆறு மடங்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பாரம்பரிய வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். மேலும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வமுள்ள நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய வணிக மாதிரிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதனால், டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி வரும் ஆண்டுகளில் இந்தியாவை மிகவும் கவர்ச்சிகரமான முதலீடு செய்யும் இடமாக மாற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் தங்கள் நிதியில் 75க்கும் அதிகமான தொகையை டிஜிட்டல் முதலீடுகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல முதலீட்டாளர்கள் Software as Service மற்றும் B2C/B2B இ-காமர்ஸ் துறைகளில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே, 2030ல் இதன் வளர்ச்சியானது ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகரித்து $350-380 பில்லியனாக உயிரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கையும் இருமடங்காக அதிகரிக்கும் மற்றும் 60 சதவீதத்திற்கும் அதிகமான புதிய கடைக்காரர்கள் சிறிய நகரங்களிலிருந்து உருவாகி இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, 2030 ஆம் ஆண்டுக்குள் குடும்ப வருமானம் சுமார் $2500 டாலர்களில் இருந்து, $5500 டாலராக இருமடங்காக அதிகரிப்பதன் மூலம், இணையப் பொருளாதரத்தின் இந்த வளர்ச்சி மேலும் உந்தப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.