“36 வயதினிலே’ திரைப்படத்தில் நாயகி ஜோதிகா தன் கணவர் கதாபாத்திரத்திடம் ஒரு கேள்வி கேட்பார். “இந்தியாவின் 14 பிரதமர்களில் ஒருவர் மட்டும் தான் பெண், 15 ஜனாதிபதிகளில் ஒருவர் மட்டும் தான் பெண், (திரெளபதி முர்முவுக்குப் பிறகு இதை இப்போது இரண்டு பேர் என்று மாற்றிக் கொள்ளலாம்). ஏன் இந்த தேசத்தில் அறிவாளியான தகுதியான பெண்களே இல்லையா? இல்ல அவங்க கனவுகளை யாராவது தடை பண்ணிட்டாங்களா? பெண்களின் கனவுகளுக்கு எக்ஸ்பையரி டேட் முடிவு செய்தவர்கள் யார்? என்று.
அந்தப் படம் வெளியான போது அந்தக் கேள்வி பெண்களில் அனைத்து தரப்பினரையும் ஒரு நொடி யோசிக்க வைத்தது.
ஆம், பெண் என்பதால் அரசியல், பாதுகாப்புத் துறை, காவல்துறை, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான நாட்டின் முக்கியப் பங்களிப்புகளில் பின் தங்க வேண்டிய அவசியமென்ன? எனும் இடையறாத யோசனை பல பெண்களின் தூக்கத்தைக் கெடுத்தது. அதன் பலனாக கடந்த சில ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள், தாங்கள் இதுவரை நுழையத் தயங்கிய புதிய துறைகளில் பங்கெடுக்க்த் தொடங்கி விட்டார்கள் எனும் செய்தியை நாளிதழ்களில் காண முடிகிறது . இந்த மாற்றம் படிப்படியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
UNICEF கூறுகிறது பாலின சமத்துவம் என்பது வயது வேறுபாடு இன்றி பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலரும் ஒரே உரிமைகள், வளங்கள், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்புகளைப் பெற்று அனுபவிக்கும் நிலையாகும் என.
அந்த நிலையை நாம் எட்டி விட்டோமா என்றால், முயல் வேகத்தில் அல்ல ஆமை வேகத்தில் எட்டிக் கொண்டே இருக்கிறோம் என்று சொல்லலாம்.
அதன் வெளிப்பாடு தான் உலகப்பொருளாதார மன்றம் புதன்கிழமை வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை.
அந்த அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா அதில் பங்கேற்ற 146 நாடுகளில் 127 வது இடத்தைப் பெற்றிருக்கிறது.
இந்த விஷயத்தில் நமது அண்டை நாடுகளில் சில நம்மை ஓவர்டேக் செய்துவிட்டன. வங்கதேசம் இந்தப் பட்டியலில் 59 வது இடம் பெற்றிருக்கிறது. பூட்டான் 103 வது இடம், சீனாவுக்கு 107 ஆம் இடம். இலங்கை 115 ஆம் இடம் வகிக்கிறது. நேபாளம் 116 ஆவது இடம், இதில் பாகிஸ்தானுக்கு 142 வது இடம்.
அறிக்கையின் படி இந்தியா கல்வித்துறையில் ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கான சமத்துவத்தில் சரி விகிதத்தில் இருந்தாலும், பொருளாதார
பங்கேற்பு, மற்றும் வேலை வாய்ப்பில் 36.7% சமநிலையை மட்டுமே எட்டியுள்ளது. ஒருபுறம் ஊதியம் மற்றும் வருமானத்தில் சமமான உயர்வுகளைக் காண முடிகிறது. ஆனால், பதவி உயர்வு, தொழில்நுட்பத் துறையை கையாள்வதில் பெண்களின் பங்களிப்புகள் உள்ளிட்டவை கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறிது குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் பங்கேற்ற 146 நாடுகளுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி சமத்துவ மதிப்பெண் 68.4% உள்ளது. இது 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் 0.3% உயர்வைக் காட்டுகிறது.
அரசியல் அதிகாரமளித்தலைப் பொறுத்தவரை, இந்தியா 25.3% சமத்துவத்தைப் பதிவுசெய்துள்ளது, இம்முறை ஆண் உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் 15.1% பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்கிறார்கள். 2006 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது முன்னேற்றம் தான்.
உலகளாவிய அளவில் பார்க்கையில் அமைச்சர் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு, 75 நாடுகளில் 20% அல்லது அதற்கும் குறைவான பெண் அமைச்சர்களே உள்ளனர். அதிலும், இந்தியா, துருக்கி மற்றும் சீனாவில் 7%க்கும் குறைவான பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
2022 ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஒரு பெண் ஜனாதிபதி பதவிக்கு வந்த பின் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவிற்கு அது வெகு முக்கியமான முன்னெடுப்பாகப் பதிவாகியிருக்கிறது .
மொத்தத்தில், ஜனவரி 2022 முதல், ஒன்பது பெண்கள் அதிகாரத்திற்கு வந்துள்ளனர், மார்ச் 2023 நிலவரப்படி அவர்களில் எட்டு பேர் இன்னும் தங்கள் பதவிகளை வகிக்கின்றனர். என்று அறிக்கை கூறுகிறது.
உலகளவில் உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு பார்க்கையில் 117 நாடுகளில், பொலிவியா (50.4%), இந்தியா (44.4%) மற்றும் பிரான்ஸ் (42.3%) உட்பட 18 நாடுகள் மட்டுமே உள்ளூர் நிர்வாகத்தில் 40% க்கும் அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளன. என்பது தெரிய வந்துள்ளது.