செய்திகள்

வெற்றி நாயகன் டி.கே சிவகுமார் பற்றிய சுவாரஸ்மான தகவல்கள்!

கார்த்திகா வாசுதேவன்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவியை குறிவைத்து டி.கே.சிவக்குமார் களமிறங்கினார்.

பெங்களூரு மற்றும் புது தில்லியில் ஒரு ஹைடெக் அரசியல் நாடகத்திற்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த பதவிக்கு சித்தராமையாவைத் தேர்ந்தெடுத்துள்ளது, அதே நேரத்தில் சிவக்குமார் துணை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் பதவி குறித்த செய்தி வெளியான பின் ஊடகங்களிடம் பேசிய டிகே சிவக்குமார்,

மக்கள் தங்களுக்கு இவ்வளவு பெரிய ஆதரவை வழங்கிய பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தங்களது முக்கிய நிகழ்ச்சி நிரல் என்றும் கூறினார். துணை முதல்வர் அறிவிப்பால் சிவக்குமார் வருத்தம் அடைந்துள்ளதாக ஊகங்கள் நிலவி வந்த நிலையில், துணை முதல்வராக இருப்பதில் வருத்தம் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். அத்துடன், "நான் ஏன் வருத்தப்பட வேண்டும்?" இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக வெற்றியைப் பொருத்தவரை, நானும், சித்தராமைய்யாவும் இணைந்து செயல்படவேண்டும் என்பதே ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் விருப்பம். அதை அவர்கள் முன்னதாக என்னிடம் கேட்டுக் கொண்டார்கள், நான் ஒப்புக்கொண்டேன். என்கிறார் டி கே சிவகுமார்.

இந்த முடிவில் ஒரு பண்பட்ட அரசியல்வாதியாக மிளிரும் டி கே எஸ் குறித்து மேலும் சுவாரஸ்யமான தகவல்களை நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

டி கே சிவகுமாரைப் பொருத்தவரை அவருக்கு கர்நாடகாவின் முன்னாள் முதல்வர்களில் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணா தான் அரசியல் வழிகாட்டி என்கிறார்கள். அவர் டி.கே.சிவகுமாரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர்.கிருஷ்ணா தற்போது பாஜகவில் இருந்தாலும், சிவகுமார், கிருஷ்ணாவை இப்போதும் மிக உயர்வாகவே கருதுகிறார்.அரசியலற்று யதார்த்தமாகச் சொல்வதென்றால், டிகேஎஸ்ஸின் மூத்த மகள் எஸ்எம் கிருஷ்ணாவின் பேரன் அமர்த்தியாவை மணந்துள்ளார். அமர்த்தியா கஃபே காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தாவின் மகன்.

அரசியல் வாழ்வை மட்டும் கணக்கில் கொண்டால் 1980 களின் முற்பகுதியில் தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து டி.கே.சிவக்குமார் காங்கிரஸில் தான் இருந்து வருகிறார். கட்சி நெருக்கடியான சூழலில் இருக்க நேர்ந்தபோதெல்லாம் டிகேஎஸ் முக்கியப் பங்காற்றினார்.

1989 தேர்தலில் அறிமுகமான பிறகு டி.கே.சிவகுமார் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை.

முதல்முறையாக 1989ல், 27 வயதாக இருந்தபோது கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வென்று, சிறைத்துறை மற்றும் ஊர்க்காவல் துறை அமைச்சரானார்.

பின்னர் தமது அரசியல் வாழ்க்கையில், அவர் நகர்ப்புற வளர்ச்சித் துறை (1994-99), எரிசக்தி (2013-18), மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவக் கல்வி (2018-19) போன்ற பலதுறைகளை நிர்வகித்தார்.

பொறுப்புகளை நிர்வகித்த போதும் சரி கட்சி வெற்றி வாகை சூடாமல் வெறுமே கட்சிப்பணியாற்ற வேண்டிய சூழல் நிலவிய போதும் சரி டிகேஎஸ் காங்கிரஸுக்காக எப்போதும் சளைக்காமல் உழைத்துக் கொண்டே இருந்தார் என்கிறார்கள் கர்நாடக காங்கிரஸார்.

1991 ஆம் ஆண்டில், வீரேந்திர பாட்டீலை எதிர்பாராதவிதமாக வெளியேற்றிய பின்னர் எஸ் பங்காரப்பாவை கர்நாடக முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதில் டிகேஎஸ் மிக முக்கிய பங்கு வகித்தார்.

1989 முதல் 2004 வரை சாத்தனூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 2004 மற்றும் 2023 க்கு இடையில், DKS தனது சொந்த மண்ணான கனகபுராவில் வெற்றி பெற்றார். ஏறக்குறைய நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில், எச்.டி.குமாரசாமி போன்ற பெரியவர்களை எதிர்த்துப் போட்டியிட்டார்.

2002 ஆம் ஆண்டில், முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, பெங்களூருவின் புறநகரில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு விருந்தளித்து, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கைக் காப்பாற்ற டிகேஎஸ் வந்தார்.

2018 ஆம் ஆண்டில், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) ஆகியவற்றை ஒன்றிணைத்து கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை அமைப்பதிலும் டிகேஎஸ் முக்கிய பங்கு வகித்தார்.

டிகே சிவக்குமார் பெங்களூருக்கு அருகிலுள்ள கனகபுராவில் கெம்பேகவுடா மற்றும் கவுரம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். மைசூரில் உள்ள கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1993 ல் உஷாவை என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் ஆபரணா என்ற இரண்டு மகள்களும், ஆகாஷ் என்றொரு மகனும் உண்டு.

டிகேஎஸ்ஸின் இளைய மகள் ஆபரணா தான் எஸ்.எம். கிருஷ்ணாவின் பேரன் அமர்த்தியாவின் மனைவி.

கட்சியைப் பொருத்தவரை, 2024 லோக்சபா தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக சிவக்குமார் நீடிப்பார். சித்தராமையாவும், சிவக்குமாரும் மே 20-ம்

தேதி பெங்களூரு ஸ்ரீகண்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

மருக்களுக்கான காரணமும் அவற்றை நீக்குவதற்கான தீர்வும்!

ஜெட் லேக் (Jet Lag) பற்றி அறிந்து கொள்வோமா?

இது தெரிஞ்சா சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கவே மாட்டீங்க! 

விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்!

உங்கள் மகிழ்ச்சிக்கு தடையாய் நிற்கும் 8 பழக்க வழக்கங்கள் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT