விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரகாரன் அதிமுக கூட்டணி கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியின் சார்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் நிறுத்தப்பட்டிருந்தார். ஆரம்பம் முதலே பல சுற்றுகள் வரை விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். ஒரு கட்டத்தில் நிச்சயம் விஜய பிரபாகரன் வெற்றி பெற்று விடுவார் என்ற நிலையே இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு சில சுற்றுகள் மட்டும் இருக்கும்போது மாணிக்கம் தாகூர், விஜய பிரபாகரனை விட அதிக வாக்குகள் பெற்று முந்திச் சென்றார்.
இறுதியில், மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவதாக தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று வெறும் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், ‘விருதுநகர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது விஜய பிரபாகரனுக்கு எதிராக சூழ்ச்சி நடந்துள்ளது’ என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா அளித்த பேட்டியில், “விஜய பிரபாகரன் தோற்கவில்லை. திட்டமிட்டு சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13வது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது. அதேபோல், நள்ளிரவில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மற்ற தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சூழ்ச்சியால்தான்!
விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் செல்போனை அணைத்து வைப்பதாக அவரே தெரிவித்திருந்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு இமெயில் மூலம் புகார் அளித்துள்ளோம். மேலும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் கேட்டிருக்கிறோம்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து இத்தொகுதியில் வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் கூறும்போது, “பிரேமலதா குற்றச்சாட்டு பொய்யானது. வாக்கு எண்ணிக்கையின்போது விஜய பிரபாகரனும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பூத்தில் இருந்தார்கள். அவர்களின் ஏஜென்ட்டுகளும் இருந்தார்கள். அப்படியிருக்கும்போது எப்படி தவறு நடக்கும்?
2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள். அப்படி நடந்திருந்தால் அவர்கள் அங்கேயே அதை கேட்டிருக்கலாமே! இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அவர்கள் கட்சியினர் கிளம்பிப் போய்விட்டார்கள். அதன் பிறகு தபால் வாக்குகள் 5 மணி நேரமாக எண்ணப்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு நான் சான்றிதழை வாங்கினேன். விஜயகாந்த் பாடுபட்டு வளர்த்த கட்சியை பிரேமலதா தனது தவறான முடிவுகளால் அழித்தார். தற்போதும் அவருடைய புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மறுவாக்கு எண்ணிக்கைக்கு அவர்கள் மனு செய்திருந்தால் அது அவர்களுடைய விருப்பம்” என தெரிவித்து உள்ளார்.