செய்திகள்

இந்தியாவில் பறவுகிறதா Havana Syndrome? மத்திய அரசு விசாரணை! 

கிரி கணபதி

Havana Syndrome எனப்படும் வித்தியாசமான நோய் இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்புள்ளதா என மத்திய அரசு விசாரணை நடத்த உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் இந்தியாவில் ஹவானா சிண்ட்ரோம் பரவி உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என அமர்நாத் சாகு என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். 

கியூபா நாட்டின் தலைநகர் தான் ஹவானா. கடந்த 2016 ஆம் ஆண்டில் ஹவானா நகரில் தங்கியிருந்த அமெரிக்க அதிகாரிகள் அனைவருக்குமே ஒரே மாதிரியான உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருமே தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைகளில் வித்தியாசமான சத்தங்களும், வித்தியாசமான உணர்வுகளும் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு வாந்தி, தலைசுற்றல், அதிக தலைவலி, சோர்வு, செவித்திறன் பாதிப்பு போன்றவையும் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். இதனால் தான் இந்த வித்தியாசமான குறைபாடு ஹவானா சிண்ட்ரோம் எனப் பெயரிடப்பட்டது. அச்சமயத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். 

இந்த வித்தியாசமான நோய் அமெரிக்கர்களுக்கு மட்டுமின்றி அங்கு வசித்து வந்த சில கனடா நாட்டினருக்கும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சிலர் அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு குணமாகினர். ஆனால் சிலருக்கு தொடர்ந்து அந்த நோயின் பாதிப்பு இருந்தது. கியூபா அரசாங்கம் இந்த நோய் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என மறுத்துவிட்டது. அமெரிக்கா நாட்டு அதிகாரிகளுக்கு வேண்டுமென்றே தொந்தரவு கொடுக்கும் வகையில் இந்த நோய் உருவாக்கப் பட்டிருக்கலாம் என அமெரிக்கா கருதியது. 

இதுகுறித்து, அமெரிக்க ராணுவமும் மருத்துவத் துறையும் சில ஆண்டுகளாக விசாரணை நடத்தியதில், வெளிநாட்டு சூழலில் அதிக மன அழுத்தத்துடன் பணிபுரிந்ததால் ஏற்பட்ட உளவியல் சார்ந்த பிரச்சினை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு, இந்த நோய் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி, இந்த நோய் இயற்கையாக ஏற்படவில்லை, ரேடியோ அதிர்வெண் அலைவரிசையைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்டு ஹவானா சிண்ட்ரோம் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், அந்த அரையின் குறிப்பிட்ட திசையிலிருந்து வித்தியாசமான சத்தம் வந்ததாகத் தெரிவித்ததால், இதற்கு மற்ற காரணங்களைக் கூறி புறம்தள்ளிவிட முடியாது என்று தெரிவித்துள்ளனர். 

இத்தகைய பயங்கர பின்னணி கொண்ட ஹவானா சிண்ட்ரோம் இந்தியாவிலும் பரவ வாய்ப்புள்ளதா என்பதை ஆய்வு நடத்தக்கோரி, பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வித்தியாசமான நோய் பற்றிய விஷயங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

கார் விபத்தில் சிக்கி பலியான பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கட்டடக் கலைக்கு புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனை கோட்டைகள்!

ஃபேஷன் உலகில் டிரெண்டாகி வரும் புதுவித சோக்கர் நெக்லஸ்கள் பற்றி பார்க்கலாம்!

விமர்சனம்: உயிர் தமிழுக்கு - சமகால அரசியல் நையாண்டி!

புதிய பார்வை எப்பொழுது ஏற்படும் தெரியுமா?

SCROLL FOR NEXT