செய்திகள்

பிரதமர் வேட்பாளராகிறாரா ஸ்டாலின்?

டேனியல் வி.ராஜா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி முடித்திருக்கிறார்கள் திமுகவினர். பிறந்த நாள் பரிசாகவும், அழைப்பாகவும் மு.க.ஸ்டாலினை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கும் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார்கள் தேசியத் தலைவர்களும், திமுகவின் மூத்த தலைவர்களும். பிரதமர் நாற்காலி காமராஜர் காலத்திலும், கருணாநிதி காலத்திலும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான சூழல்கள் உருவாகின. ஆனால் காமராஜர் கிங் மேக்கராக மாறியதாலும், தன் உயரம் தனக்குத் தெரியும் என்ற கருணாநிதியின் புரிதலாலும் பிரதமர் நாற்காலியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் இதுவரை அமர்ந்ததில்லை.

2024 ல் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் எதிர்கட்சிகளாலும், சொந்தக் கட்சியாலும் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படும் இடத்திற்கு ஸ்டாலின் நகர்ந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வினி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும் போதே, "முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நம்பிக்கையாக இருக்கிறார்" என தனது முதல் திரியைப் பற்ற வைத்தார். ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்துவதாகவும், ஒற்றுமையாக வாழ அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் எதிர்கட்சிகள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். விழா மேடையில் பேசும் போதும், "உங்கள் தந்தையின் கனவு, என் தந்தையின் கனவு, என்னுடைய கனவு, உங்களுடைய கனவு எல்லாமே அமைதியான இந்தியா தான். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள ஒற்றுமை, எப்போதுமே அமைதியை விரும்புவது தான்" என அழுத்தமாகவே பதிவு செய்தார் பரூக் அப்துல்லா.

2018 ல் முதலாவதாக முந்திக்கொண்டு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் ஸ்டாலின். ஆனால் ராகுலுக்கோ பிரதமர் பதவியில் துளியும் விருப்பமில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை அவர் துறந்ததும் அப்படித்தான். இந்தச் சூழலில் தான் வடக்கில் சரத்பவாருக்கும், தெற்கில் ஸ்டாலினுக்கும் பிரதமர் ஆக வேண்டுமென்கிற கனவு துளிர்த்திருக்கிறது.

பலிக்குமா கனவு?

"நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். யார் தலைமை தாங்குவது என்பது முக்கியமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை காப்பாற்ற, அரசியலமைப்பை காப்பாற்ற போராட வேண்டும் அதுதான் இப்போது முக்கியம்" என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியிருப்பதன் உள்நோக்கம், ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் ரேஸில் பங்கேற்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இதையெல்லாம் உறுதி செய்து விட்டுத்தான் நேற்றுப் பங்கேற்ற தேசியத் தலைவர்கள் மூலமும், திமுகவின் மூத்த தலைவர்கள் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு மூலமும் பிரதமர் ஆசையை திமுக தலைமை வெளிப்படுத்தச் சொல்லி இருக்கிறது.

"திராவிட மாடல் இந்தியாவுக்கான மாடல். நமது கூட்டணியில் 10 கட்சிகள் உள்ளன. அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் பாங்கு திமுக தலைவர் இடம் உள்ளது. இதை தேசியக் கட்சி தலைவர்கள் உணர்ந்து செல்ல வேண்டும்" என தங்கள் கட்சியின் தலைமை அகில இந்திய அரசியலுக்கு தலைமை ஏற்க தயாராகிவிட்டதை அங்கிருந்த தேசிய தலைவர்களுக்கு சூசகமாக உணர்த்தினார் திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு.

"நித்தம் ஒரு புதிய திட்டம், அவற்றை செயல்படுத்துவது, சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்டவைகளை சிறப்பாக செய்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர். இப்படிப்பட்ட தலைவரை நாடு எதிர்பார்க்கிறது. தனிமனித சுதந்திரம் கிடைக்கவில்லை. மதச்சார்பின்மை இல்லை. இப்படிப்பட்ட நாட்டை காப்பாற்ற ஆற்றல் மிக்க தலைவரை இந்தியா தேடுகின்றது" என்று பேசிய திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், "தமிழ்நாட்டை காப்பாற்றி உள்ளீர்கள். ‌இந்திய நாடும் ஒருநாள் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து நீங்கள் தான் நாட்டுக்குத் தலைமை ஏற்க வர வேண்டும் என சொல்லும்" எனக் குறிப்பிட்டார்.

இப்படி தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலமாக தனது பிரதமர் கனவை தம் கட்சித் தொண்டர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் விதைத்துள்ளது திமுக தலைமை. "2024 பொதுத்தேர்தல், சித்தாந்தப் போரில் வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பாகும்" என்று ஸ்டாலின் பேசியதன் மூலம், தேசிய நீரோட்டத்தில் நான் கலந்து விட்டேன், அதற்கு நான் தலைமையேற்கப் போகிறேன், வாருங்கள் என்பதான அழைப்பை விடுத்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த வார்த்தையையும் பேசாத திமுக தலைவர் ஸ்டாலின், 2021 மே 7 ல் முதலமைச்சராக பதவியேற்ற போது குறிப்பிட்ட, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும்' என்ற பதத்தை இரண்டாவது முறையாக நேற்றும் உச்சரித்தார். இதன் மூலம் மீண்டும் அந்தச் சொல்லை இந்திய அளவில் வரும் ஆண்டு உச்சரிக்கத் தயாராகி விட்டதையே காட்டுகிறது.

சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக்கப்படுவார் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. ஆனால், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என உதயநிதி அறிவித்தது, மோடியை தனியாகச் சென்று சந்தித்தது, பிரசாரத்தின் போது தேசிய அளவில் கவனம் ஈர்க்க எய்ம்ஸ் எனச் சொல்லி ஒற்றைச் செங்கலை கையில் எடுத்தது, அமைச்சர் பதவி ஏற்றது, முதலமைச்சர் கீழ் இருந்த சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையை ஒதுக்கியது எனப் பல அதிரடி மூவ்கள் மூலமாக உதயநிதி துணை முதலமைச்சராக இல்லை, முதலமைச்சராகத் தான் ப்ரமோட் செய்யப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. மகனுக்கு தன்னுடைய நாற்காலியைக் கொடுத்து விட்டு தனக்கான நாற்காலி டெல்லியில் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் ஸ்டாலின்.

முதல்முறையாக எல்இடி மேடை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தலைவர்களின் கட்-அவுட்கள், நூறடி உயரக் கம்பத்தில் ஐந்து கட்சிகளின் கொடிகள் எனப் பிரமாண்டமாக விழாவை ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செங்கோல் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

செங்கோல் செங்கோட்டைக்குச் செல்வதற்கான வழிதானே அன்றி, வேறென்ன?

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT